

ஏ.சி.யில் இருந்து அமோனியா வாயு கசிந்து அறை முழுவதும் பரவியதால் தூங்கிக் கொண்டிருந்த தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் காந்தி(55). சென்னையில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மகாராஷ்டி ராவில் இருந்து வந்திருந்தார். கீழ்ப் பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உறவினரின் வீட்டில் செவ்வாய் கிழமை இரவு தங்கினார். மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்காததால் உறிவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கையிலேயே ஓம்பிரகாஷ் காந்தி இறந்து கிடந்தார்.
அவரது அறையில் இருந்த ஏ.சி.யில் கோளாறு ஏற்பட்டு அதில் இருந்து அமோனியா வாயு கசிந்து அறை முழுவதும் பரவியுள்ளது. இரவில் தூக்கத்தில் அதை சுவாசித்த ஓம்பிரகாஷ் காந்தி மரணம் அடைந்துள்ளார்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.சி. பயன்படுத்துவோரின் கவனத்துக்கு
ஏ.சி மெக்கானிக் ஒருவர் கூறும்போது, "காற்றைக் குளிர்ச்சிப் படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில் இருந்துதான் அம்மோனியா வாயு கசியும். ஏ.சி.யை சரியாக பராமரிக்காமல் விட்டால் மட்டுமே இந்த பிரச்சினை ஏற்படும். சரியான கால இடைவெளியில் அதை சர்வீஸ் செய்தால் 90 சதவீத பிரச்சினைகள் ஏற்படாது" என்றார்.