Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM

24-ல் கூட்டுறவுச் சங்க இடைத்தேர்தல் - இன்று வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 24-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.ஆர்.மோகன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு 5 நிலைகளில் நடைபெற்ற தேர்தலில் 21,027 சங்கங்களில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 889 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் 20,993 பேர் தலைவர்களாகவும், 20,996 பேர் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றனர்.

அதன்பிறகு, தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர்கள், துணைத் தலைவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்களில் சிலர் இறந்துவிடுதல் அல்லது தங்களது பதவியை ராஜினாமா செய்தல் போன்ற காரணங்களால் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டன.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் பிற எட்டு செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 316 கூட்டுறவுச் சங்கங்களில் 416 நிர்வாகக் குழு உறுப்பினர் பணியிடங்களும், 65 கூட்டுறவுச் சங்கங்களில் 37 தலைவர் பணியிடங்களும், 31 துணைத் தலைவர் பணியிடங்களும் தற்போது காலியாக உள்ளன.

இப்பணியிடங்கள் இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படவுள்ளன. அதன்படி, சம்பந்தப்பட்ட சங்கங்களில் ஜனவரி 4-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் ஆட்சேபணை இருந்தால் 6-ம் தேதிவரை தெரிவிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 8-ம் தேதி வெளியிடப்படும்.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம். அன்று மாலை 5.30 மணிக்குள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

21-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம். 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இடைத்தேர்தல் 24-ம் தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும். மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 29-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x