Published : 24 May 2017 12:12 PM
Last Updated : 24 May 2017 12:12 PM

ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்புக்கு பள்ளிவாசல்களுக்கு 4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

ரமலான் மாத நோன்பின் போது நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பள்ளிவாசல்களுக்கு 4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க ஜெயலலிதா முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டார். அதன்படி,பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இது இஸ்லாமிய பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 4900 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடையும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x