

காவல் கிணறில் இருந்து, நாகர்கோவில் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வரு கிறது. ஆரல்வாய்மொழி அருகே இச்சாலையோரத் தென்னந்தோப்பில் கருவேப்பிலை சாகுபடி செய்துள்ள விவசாயி சுப்பையாவுக்கு வயது 85.
தினமும் காலை 5 மணிக்கெல்லாம் தோப்புக்கு வந்து விடும் சுப்பையா, களைச் செடிகளை அகற்றுவது, தண்ணீர் நிரப்புவது, உரமிடுவது என சகல வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்.
தென்னை மரங்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை பயன்படுத்தி அரை ஏக்கர் பரப்பில் கறிவேப்பிலை சாகுபடி செய்துள்ளார் இவர். இளம் தலைமுறையினருக்கு உழைப்பின் பெருமையை கற்பிக்கும் வகையில், 85 வயதிலும் உடல் உழைப்பால் கவனம் ஈர்த்து வருகிறார் விவசாயி சுப்பையா.
அவர் கூறியதாவது:
அந்த காலத்துல சிறுதானி யங்கள் அதிகமா பயிரிடுவோம். வீட்டுக்கு வீடு கம்பு, ராகி, சோளம், கேழ்வரகுன்னு சிறு தானியங்கள் இருக்கும். அதுதான் உணவாக இருக்கும்.
காலப் போக்கில் கொஞ்சம், கொஞ்சமா அவற்றின் சாகுபடி குறைஞ்சு போச்சு. 85 வயசு முடிஞ்சு 4 மாசம் ஆச்சு. இப்பவும் கண்ணு தெளிவாகத் தெரியுது. கண்ணாடி போட வேண்டிய சூழல் ஏற்படல. இந்த வயதுக்கு ஏத்த வியாதிகள்ன்னு சொல்ற சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் எதுவுமே எனக்கு இல்லை. இதுக்கெல்லாம் காரணம் அன்னிக்கு சாப்பிட்ட ஆரோக்கியமான உணவுங்க தான்.
தினமும் காலையில் 5 மணிக்கு வயலுக்கு போனால், 10 மணி வரை வேலை பார்ப்பேன். சில நேரங்களில் கறிவேப்பிலை பறிப்பு இருந்தா மதியம் வரை தோட்டத்துல இருப்பேன். வேலையாட்களை வைத்துக் கொள்வதில்லை. என் உடலில் வலு இருக்கும் வரை என் தோட்டத்து வேலையை நானே பார்க்க வேண்டும் என்பது ஒரு வைராக்கியம்.
தொடக்கத்தில் சிறுதானியங் களில் இருந்து இந்த பகுதி விவசாயிகள் நிலக்கடலைக்கு மாறினோம். பின்னால், காற்றாலைகள் பெருகியதால் அந்த சாகுபடியும் குறைஞ்சுது. இப்போ நாற்கறச்சாலைக்கும் விவசாய நிலங்கள் போயுள்ளது. எனது நிலமும் சிறிது போயுள்ளது. ஆனால், என் விவசாய ஆர்வம் அப்படியே உள்ளதால் மிச்சம் இருக்கும் இடத்தில் ஆத்ம திருப்திக்காக வெள்ளாமை செய்கிறேன்” என்றார் அவர்.