Published : 20 Feb 2014 10:45 AM
Last Updated : 20 Feb 2014 10:45 AM

தமிழக முதல்வரை சந்திக்க பேரறிவாளன் விருப்பம்

தமிழக சட்டமன்றத்தில் முரு கன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதைக் கேட்டதும், வேலூர் சிறையில் உள்ள மூவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர். விரைவில் குடும்பத்துடன் சென்று தமிழக முதல்வரை சந்திப்பேன் என சிறை அதிகாரிகளிடம் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக் குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் உணர்வாளர்கள் பலர் வேலூர் சிறை முன்பாக குவிந்து பட்டாசு வெடித்துவருகின்றனர்.

தமிழக அரசின் அறிவிப்பை தொலைக்காட்சி மூலம் தெரிந்துகொண்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

சிறை அதிகாரிகளை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த மூவரும், எங்களை விடுதலை செய் வதாக அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசு மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது. நாங்கள் மறு பிறவி எடுத்துள்ளோம் என்றனர்.

பின்னர், தமிழக முதல்வர் அறிவிப்பால் எண்ணில் அடங்காத மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நான் விடுதலையானதும் எனது தாயுடன் சென்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க கடைமைப்பட்டிருக்கிறேன். எனது விடுதலைக்கு தமிழக முதல்வர் பெரும் முயற்சி எடுத்துள்ளார் என்று பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் மத்தியில் இந்த மூவரின் விடுதலை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மத்திய சிறையில் ஹை செக்யூரிட்டி பிரிவு 2-ல் முருகன், பேரறிவாளன் ஆகியோர் உள்ளனர். பிரிவு 1-ல் சாந்தன் உள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக மூவரின் நன்னடத்தைகள், தண்டனை குறைப்பு கேட்டு மேல் முறையீடு செய்துள்ள மனுக்கள் மற்றும் தேதி விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அளிக்கும்படி வேலூர் சிறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முருகன், ஓவியம் வரைவதில் திறமைசாலி. கடந்த ஓராண்டுக்கு முன்புதான் எம்சிஏ பட்டம் பெற்றார். அதேபோல, பேரறிவாளன் எம்சிஏ பட்டதாரி. சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளையும் முடித்துள்ளார். வேலூர் சிறையில் உள்ள கைதி களின் கல்வி வளர்ச்சிக்காக பேரறிவாளன் முழுமையாக பணியாற்றி வருகிறார். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிற சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகள் ஏற்பாடு செய்வது, கைதிகளை ஒருங்கிணைப்பது, சிறப்பு வகுப்புகள் நடத்துவது ஆகியவற்றைக் கவனித்துவந்தார். சாந்தன் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவராக இருந்தாலும் கவிதை, சிறுகதை எழுதுவதில் ஆர்வம் உடையவர். சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கைதிகளின் திறமைகளை பாராட்டும்விதமாக தொடங்கப்பட்ட உள்ளொளி’ என்ற இதழின் வேலூர் மத்திய சிறை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ‘உண்மை அடக்கமும் முடக்கமும்’ என்ற சிறுகதையும் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x