

சட்டப்பேரவை தேர்தலின்போது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது, தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமலதா மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி பிரேமலதா திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் ஆஜராகி ரூ. 10 ஆயிரம் பிணையுடன் இருநபர் ஜாமீன் அளித்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும், 2 வாரத் துக்கு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் கையெழுத் திட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் ஏற்கெனவே அவருக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டது.
இந்த நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமலதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனை களை ஏற்காமல் அதை மாற்றியமைக்கக் கோரி மீண்டும் மனுதாக்கல் செய்ததால், பிரேமலதாவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், இத்தொகையை சென்னையில் உள்ள அனாதை இல்லம் ஒன்றுக்கு தரவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 23-ம் தேதியில் இருந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த பிரேமலதா, முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி நேற்று உத்தரவிட்டார்.