

கும்மிடிப்பூண்டியில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவலும், உயிரிழப்பும் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம் புதுக்கும்மிடிப்பூண்டியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 பேர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; நோயின் பாதிப்பால் கடந்த இரு நாட்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழப்புக்கு காரணமாக காய்ச்சல் எந்த வகையானது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கும்மிடிப்பூண்டி மக்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது நேற்று முன்நாள்தான் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர்களை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், புதுக்கும்மிடிப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையம் நீண்டகாலமாக பூட்டிக் கிடப்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.
கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லாததால் கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 39 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவரின் நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் அங்கம்மாள், சீனிவாசன் ஆகியோர் நேற்று முன்நாளும், ரமேஷ் என்பவர் நேற்றும் உயிரிழந்தனர். அவர்களுக்கு நோய்பாதிப்பை கண்டுபிடிப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் ஏற்பட்ட தாமதம் தான் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.
இவர்கள் தவிர 10 குழந்தைகள் உட்பட 15 பேர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவம் மற்றும் நோய்த்தடுப்பு பணிகளில் அரசு தோல்வியடைந்து விட்டதையே இந்த உயிரிழப்புகள் காட்டுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழப்பது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதுக்கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள காவேரிராஜபுரம் பகுதியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 குழந்தைகள் உயிரிழந்தனர். அதன்பின் காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பகுதியில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.
மர்மக் காய்ச்சலுக்கு முக்கியக் காரணம் சுகாதாரக் குறைபாடுகள்தான். புதுக்கும்மிடிப்பூண்டியில் இருளர் எனப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 16 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுவர் இல்லாத ஓலைக்குடிசைகளில் வாழும் அவர்களுக்கு கழிப்பிட வசதி கூட செய்து தரப்படவில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் அவர்களுக்கு இல்லை.
மருத்துவத்துறையில் வரலாற்றுப் புரட்சி படைத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் ஒரு மாநிலத்தில் என்ன நோய் என தெரியாமலேயே பலர் இறப்பதையும், அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் மருத்துவர்கள் இல்லாமல் பூட்டிக் கிடப்பதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த அவலங்கள் அனைத்துக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது நோய் பரவலும், உயிரிழப்பும் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.