

கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக மொத்தம் 8,432.5 மெகாவாட் மின்சாரம் பெற்று வருவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
''எனது முந்தைய ஆட்சி காலத்திலேயே அதாவது 2001-2006ஆம் ஆண்டு ஆட்சி காலத்திலேயே வல்லூரில் 1,500 மெகாவாட், தூத்துக்குடியில் 1,000 மெகாவாட், வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட், சிறு புனல் மின் திட்டங்கள் மூலம் 36 மெகாவாட் என மொத்தம் 3,136 மெகாவாட் அளவிற்கான மின்சார உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன.
ஆனால், தங்களது சுயநலத்துக்காக இந்த திட்டங்களை எல்லாம் முந்தைய திமுக அரசு விரைந்து முடிக்கவில்லை. அதிக விலையிலான மின்சாரத்தை தனியாரிடமிருந்தும், மின் பரிமாற்றத்திலிருந்தும் வாங்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டங்கள் எல்லாம் தாமதப்படுத்தப்பட்டன.
2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு மின் திட்டப் பணிகளை விரைந்து முடித்ததோடு, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வரப்பட வேண்டும் என்றால், அதற்கான மின்வழித் தடம் வேண்டும். வட மாநிலங்களிலுள்ள மின்சாரத்தை இங்கே பெறுவதற்கு வகை செய்யும் விதமாக மின்வழித் தடங்கள் அமைத்திட அதிமுக அரசு வலியுறுத்தியதன் காரணமாகவே மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரிலிருந்து திருவலம் இடையேயும் மற்றும் நரேந்திரா-கோலாப்பூர் இடையே 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின்வழித் தடங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நாம் மின்சாரம் பெற முடிகிறது.
இங்கே நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மத்திய அரசு திட்டங்களிலிருந்து நமக்கான பங்கு ஆகியவற்றின் மூலம் 4,455.5 மெகாவாட் மற்றும் நீண்ட கால மற்றும் நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் மூலம் 3,030 மெகாவாட் சூரிய மின் சக்தி மூலம் 947 மெகாவாட் என மொத்தம் 8,432.5 மெகாவாட் மின்சாரம் கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக பெற்று வருகிறோம்'' என்று ஜெயலலிதா தெரிவித்தார்.