

அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரது படங்களைத் தவிர மற்றவர்கள் படம் இடம்பெறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதை வரவேற்றுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த உத்தரவை வரவேற் கிறேன். தமிழக அரசின் அனைத்து விளம்பரங்களிலும் பத்திரிகை, தொலைக்காட்சி, திரையரங் குகளில் செய்யப்படும் விளம்பரங் களிலும் முதல்வராக இல்லா மலேயே ஜெயலலிதாவின் படங் கள் இடம்பெற்று வருகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத் தப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்:
உச்ச நீதிமன்றத்தின் கருத்தை மதிக் கிறோம். அதேநேரத்தில் ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வரின் படத்தை அரசு விளம்பரங்களில் போடக்கூடாது என்று சொல்வது சரியாக இருக்காது. விளம்பரங்களுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ உரிய வழிமுறைகளைக் காணும்படி அரசுக்கு உத்தரவிடலாம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:
மத்திய அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரது படங்கள் இடம் பெறலாம் என்றால் சரி. மாநில அரசு விளம்பரங்களில் முதல்வர் உட்பட யாருடைய படமும் இடம் பெறக்கூடாது என்பது ஏற்புடை யது அல்ல. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட முதல்வரின் படம், அரசு விளம்பரங்களில் இடம்பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? எனவே, இதுபற்றி உச்ச நீதிமன்றம் விளக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
உச்ச நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு விளம்பரங்களுக்கு மட்டும் என்றால் ஏற்புடையதாக இருக்கும். மாநில அரசு விளம்பரங்களிலும் ஆளுநர், முதல்வர் படங்கள் இடம் பெறக்கூடாது என்பது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகவே இருக்கும். எனவே இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் இடம்பெறு வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மத்திய அமைச் சர்கள், மாநில ஆளுநர்கள், முதல் வர்கள், அமைச்சர்கள் ஆகியோரது படங்கள் இடம் பெறக்கூடாது என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு பொருத்தமானதா என்ற கேள்வி எழுகிறது.
திமுக சட்டப்பேரவை உறுப் பினர் கம்பம் என்.ராமகிருஷ்ணன்:
இந்த உத்தரவு, மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவிப்பதாக உள் ளது. தமிழகத்தில் எந்தக் கட்சி முதல்வராக இருந்தாலும், 6 கோடி பேர் வாக்களித்து தேர்ந் தெடுக்கப்பட்ட முதல்வரின் புகைப் படத்தை அரசு விளம்பரத்தில் போடக்கூடாது என்பது எப்படி சரியாக இருக்கும்? இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிராஜுதீன்:
பொது வாக அரசுக்கு விளம்பரங்களே தேவையில்லை. சில நேரங்களில் அரசு திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேருவதற்காக விளம்பரம் தேவைப்படுகிறது. அரசாங்கத்தை அரசியல்வாதிகள்தான் நடத்து கின்றனர். அவர்கள் அரசியல் ஆதா யத்துக்காக அரசு விளம்பரங்களை தவறாகப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தேர்தல் நேரத்தில் அரசு விளம்பரங்களை தவறாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் தங்களுக்கு சாதகமான கருத்து களை உருவாக்குகின்றனர். இது சட்டப்படி தவறு.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.சுதா:
இந்தத் தீர்ப்பு வரவேற் கக்கூடியது. இந்திய அரசியல மைப்புச் சட்டப்படி அரசு விளம் பரங்களில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்கள் இடம் பெறலாம். அதில், அரசியல் கட்சியினர் படங்கள் இடம்பெறுவது தவறு. தமிழகத்தில் கடந்த குடியரசு தின அணிவகுப்பின்போது வாகன ஊர்திகளில் முன்னாள் முதல்வர் படம் இடம்பெற்றிருந்தது மக்களை முகம் சுளிக்க வைத்தது. அதனால் இதுபோன்ற விஷயங்களை தடுக்க இந்த தீர்ப்பு உதவியாக இருக்கும்.