Published : 13 Jul 2015 08:20 AM
Last Updated : 13 Jul 2015 08:20 AM

முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் சொத்து: உரிமை கொண்டாடுகிறார் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் சொத்து; அவரது உடல் நிலை குறித்து தெரிந்துகொள்ள எங்களுக்கு உரிமை உண்டு என்று திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

கடந்த 2011 சட்டப்பேரவை, 2014 மக்களவை தேர்தலில் மக்களின் செல்வாக்கை இழந்த திமுக 2016 சட்டப்பேரவை தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் ஏற்பட்ட அனுபவத்தை கருத்தில் கொண்டு சரியான வியூகம் அமைத்து வரும் 2016 தேர்தலில் வெற்றிபெறுவோம்.

தமிழக அரசின் செயல்பாட்டுக்கு உங்களின் மதிப்பெண்?

செயல்படாத அரசாங்கத்துக்கு எப்படி மதிப்பெண் அளிப்பது. தேர்வில் ஒரு மாணவன் ஒரு பக்கமாவது எழுதினால்தான் கொஞ்சம் மார்க் போடலாம். வெற்று பேப்பர் கொடுத்தால் பூஜ்ஜியம்தான் கொடுக்க முடியும்.

2 ஜி அலைக்கற்றை ஊழல் இறுதி விசாரணை 2016 தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?

எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாது.

2011-ல் கூட்டணியை அமைத்து தேர்தலை திமுக சந்தித்தது. வரும் 2016 தேர்தலில் அதுபோன்ற கூட்டணி உருவாகும் சூழல் இல்லையே?

எந்த நேரத்திலும் பெரிய கூட்டணி அமையும். அப்படி அமைந்த கூட்டணி ஒரு நொடியில் நொறுங்கியதும் உண்டு. ஆகவே, கூட்டணி குறித்து இப்போதே கணிக்க முடியாது.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளனவே?

சேரமாட்டோம் என்று சொல்பவர்களை என்ன செய்ய முடியும். அது அவர்கள் இஷ்டம்.

மு.க.அழகிரி இல்லாத தென்மாவட்ட திமுக பலமிழந்து காணப்படுகிறதே?

இது பத்திரிகைகளின் கருத்து.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து திமுக தலைவர் கேள்வி எழுப்பியதன் பின்னணி?

சமீபகாலமாக முதல்வரின் நடவடிக்கைகள், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கூட்டிக் கழித்துப் பார்த்தால், முதலமைச்சருக்கு உடல் நிலை சரியில்லையோ என்ற ஐயம் எழுகிறது. கோட்டையில் ஓரிரு நிமிடங்கள் காணொலியில் காட்சி தந்துவிட்டு வீட்டுக்கு போய் விடுவது, முதலமைச்சரிடத்தில் ஆயிரக்கணக்கான பைல்கள் தேங்கியுள்ளன என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுவது, வழக்கமாக நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்படாதது, வெகு காலமாக அமைச்சரவை கூடாமல் இருப்பது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிதான் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

தமிழக முதலமைச்சர் என்பவர் ஒரு கட்சியின் தலைவர் மட்டும் இல்லை. அவர் தமிழ்நாட்டின் சொத்து. எனவே, அவரது உடல் நிலை குறித்து அறிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. எனவே, இது கெட்ட எண்ணத்தின் நோக்கம் அல்ல. நல்லெண்ணத்தின் வாதம்.

அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை. அதேநேரம், திமுக மீது மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை ஏற்படவில்லை என்ற அரசியல் விமர்சகர்களின் கருத்து?

அவர்கள் எல்லாம் யார் என்று எங்களுக்கு தெரியும். அரசியல் விமர்சகர்களுக்கு என்ன டாக்டர் பட்டமா கொடுத்திருக்கிறார்கள்.

முல்லை பெரியாறு, காவிரி பிரிச்சினையில் திமுக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயலுகிறது. ஆனால், அதிமுக அரசு வழக்கு மூலம் தீர்வு காண முயல்வது ஏன்?

காவிரி நடுவர் மன்றம் அமைக்க வாதாடியது, இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு பெற்றுத்தந்தது திமுக தலைவர்தான். அந்த தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வைத்தது அதிமுக. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க டெல்லி சென்று பிரதமரை பார்த்து, அதற்குரிய அமைச்சரை சந்தித்து விவாதித்திருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்துக்கு போவதைப்போல இதற்கும் நீதிமன்றத்துக்கு சென்று முடக்கி வைத்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்திருக்கலாம்.

தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறை செயல்பாடு எப்படி இருக்கிறது?

உடம்பு சரியில்லை என்று மொத்தமாக சொல்லிவிட்டேன். பிறகு கால் மட்டும் எப்படி இருக் கிறது என்று கேட்பது எப்படி?

பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பற்றி உங்கள் கருத்து?

“என் பையன் எனக்கு எப்போதும் ராஜா” அப்படின்னு கொஞ்சுவதில் தப்பில்லை. மற்றவர்கள் அப்படி கொஞ்சறாங்களான்னு பார்ப் போம்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x