எதிர்க்கட்சிகள் என்பது எதிரிக்கட்சிகள் அல்ல: புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி பேச்சு

எதிர்க்கட்சிகள் என்பது எதிரிக்கட்சிகள் அல்ல: புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி பேச்சு
Updated on
3 min read

'எதிர்க்கட்சிகள் என்பது எதிரிக் கட்சிகள் இல்லை. எதற்கும் கண்ணை மூடி எதிர்க்கக் கூடாது. ஆளும் கட்சியோடு இணைந்து மக்கள் சேவையாற்ற வேண்டும்' என்று புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியிருக்கிறார்.

புதுச்சேரியில் நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதிய சட்டப்பேரவைத் தலைவராக வைத்திலிங்கங்கம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரை வாழ்த்தி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றி முதன் முறையாக புதுச்சேரி மாநில சட்டப் பேரவைக்குள் வந்துள்ளேன். காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு வாக்களித்து ஆளும் கட்சியாக அமரச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, இளம்தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏகமனதாக பேரவைத் தலைவரும், துணைத் தலைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வைத்திலிங்கம் எந்தவித பதற்றமின்றி செயல்படக் கூடியவர். அரசியல் வாழ்க்கையில் முத்திரைப் பதித்தவர். சாதாரன எம்எல்ஏ முதல் முதல்வர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற அனைத்து பதவிகளையும் வகித்துள்ளார். கிராமப்புற மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரின் மனதையும் கவர்ந்தவர். தடம்புறளாமல் ஒரே இடத்தில் தன்னை ஐக்கியம் செய்து கொண்டு இருப்பவர். தனது தந்தை வழியில் மக்கள் பணி ஆற்றி வருகிறார். நெட்டப்பாக்கம் தொகுதியில் 6 முறையும், காமராஜர் நகர் தொகுதியில் 2 முறையும் என தொடர்ந்து 8 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாங்கள் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். ஆளும் கட்சி செயல்படுத்தும் திட்டங்களில் குறைகளை சுட்டிக் காட்டினால் நிவர்த்தி செய்வோம். நல்லத் திட்டங்களை பாராட்ட வேண்டும்.

எதிர்க்கட்சிகள் என்பது எதிரிக் கட்சி இல்லை. எதற்கும் கண்ணை மூடி எதிர்க்க கூடாது. ஆளும் கட்சியோடு இணைந்து மக்கள் சேவையாற்ற வேண்டும். ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சட்டப் பேரவையில் சமமான நேரம் ஒதுக்கி வாய்ப்பளிக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் முதல்வராக இருந்த போது மாநில வளர்ச்சிக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் மத்திய அரசை அணுகி நிதி பெற்றுத் தந்தார். அவரது வழியில் நல்லாட்சி நடத்துவோம். பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர் என்று கூறினார்.

நலத்திட்டங்கள் நிறைவேற்ற பேரவைத் தலைவர் பங்கு முக்கியம்: நமச்சிவாயம்

14-வது சட்டப்பேரவைக்கு என்னை பேரவை உறுப்பினராக தேர்வு செய்து அனுப்பிய வில்லியனூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது பதவியேற்றுள்ள பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருந்த காலத்தில் கடுமையான நிதித்தட்டுப்பாடு இருந்தது.

அப்போது நிதி மேலாண்மையைக் கையாண்டு மக்களுக்கான திட்டங்களை திறம்பட செயல்படுத்தினார். தொடர்ந்து பலமுறை தேர்தலில் வென்ற சிறப்புடையவர். இந்த அவையை உங்கள் அனுபவத்தால் திறம்பட நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற செய்வதில் பேரவைத் தலைவரின் பங்கு முக்கியமாக இருக்கும். சட்டப்பேரவைத் தலைவர் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மக்கள் பணிபுரிய வேண்டும்.

ஆளுநராக தகுதியுள்ளவர் வைத்திலிங்கம்: அமைச்சர் கந்தசாமி

பல்வேறு பதவிகளை வசித்து திறம்பட செயல்பட்டவர் சட்டப்பேரவைத் தலைவர். அவர் மேலும் சிறப்பாக செயல்பட்டு மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனை புதுச்சேரி மக்கள் பெருமையுடன் ஏற்றுக் கொள்வார்கள். சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு நடந்த போது தானாக முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் வைத்திலிங்கம்.

தலைமைக்கு தகுதியானவர்: அமைச்சர் ஷாஜஹான்

எந்த பொறுப்பை யாரிடம் கொடுக்க வேண்டும். எப்படி நடத்த வேண்டும் என்பதை சட்டப்பேரவைத் தலைவர் நன்கு அறிந்தவர். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது கடுமையான நிதிச்சுமை இருந்தது. அதனை திறம்பட எதிர்கொண்டு செயலாற்றியவர். உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சாதாரணமாக எந்தவித சலனமும் இன்றி பதில் அளிப்பதில் சிறப்புடையவர். எந்த பணியைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்பவர். சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு வைத்திலிங்கம் ஒருவரே தகுதியானவர். அவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை.

65 சதவீத மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்: அதிமுக அன்பழகன்

புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தை வாழ்த்திப் பேசுகையில், ''இந்தியா போன்ற நாடுகளில் ஜனநாயகத்தை தொடர்ந்து காப்பாற்றுவதில் பேரவைத் தலைவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பேரவையின் மரபும், மாண்பையும் தலைவர் தான் காக்க வேண்டும். ஆளும் கட்சியாக்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிராக 65 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை நினைவில் கொண்டு உறுப்பினர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தினால், நாங்கள் முழுமையாக வரவேற்போம்.'' என்று கூறிக்கொண்டே, ''வாக்களித்த மக்களின் எண்ணத்துக்கு மாறாக புதிய முதல்வர் பொறுப்பேற்றுள்ளார்'' என்று அன்பழகன் பேச அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கந்தசாமி ‘‘ஏற்கனவே புதுச்சேரியில் இது போன்று சண்முகம் முதல்வராக பொறுப்பேற்று 6 மாதகாலம் இருந்துள்ளார்’’ என்றார்.

நமச்சிவாயம் எழுந்து ‘‘இது முதல்நாள் கூட்டம் எனவே, அதற்கு தகுந்தவற்றை மட்டும் பேசினால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

அப்போது பேசிய பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் ‘‘இன்று லிமிட்டாக மட்டும் பேசலாம்’’ என்றார்.

உடனே முதல்வர் நாராயணசாமி ’’எதிர்க்கட்சிகள் எதை பேசினாலும் நாங்கள் கேட்கத் தயாராக உளளோம்’’ என்றார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் அன்பழகன் பேசினார்.

''பேரவைத் தலைவர் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். திறமையான அரசியல் நிர்வாகியாக உள்ளார். அவரது பணியை நினைத்து பெருமை அடைந்திருக்கிறேன். கடந்த ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக வைத்திலிங்கம் இருந்த போது, ஆளும் கட்சியின் முறைகேடு, ஊழல்கள் குறித்து எடுத்துக் கூறினார். பல திறமைகள் அவருக்கு இருந்தாலும், அவையை நடத்த வேண்டும் எனக்கூறி கூண்டில் அடைத்து விட்டார்கள்.’’ என்றார்.

அதற்கு வைத்திலிங்கம், ''உங்களை சமாளிப்பதற்காக தான் எனக்கு இந்த பதவியை வழங்கியிருக்கின்றனர்'' என்று சொல்ல அவையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

ஆளும் அரசுக்கு திமுக ஒத்துழைப்பு தரும்: சிவா எம்எல்ஏ

பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தொடர்ந்து ஓரே கட்சியில் விசுவாசமாக நீடித்து வருகிறார். 8 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு இந்த அவையில் நிறைய அனுபவம் உள்ளது. அவரது பணி சிறக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான பணிகள் அவையில் நடக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். நல்ல திட்டங்களுக்கு திமுகவும் ஒத்துழைப்பு தரும். உங்களை எவரும் திசை திருப்ப முடியாது. உங்களது நிர்வாகத்திறமை எங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் பேரவையில் இருந்து அரசை திறம்பட நடத்த வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம்.

ஆளுநரை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

வைத்திலிங்கம் தனது ஏற்புரையில் பேசும்போது: ‘‘புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 14 புதிய உறுப்பினர்கள் சட்டசபைக்கு வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் பெண்கள் என்பது பாராட்டுக்குரியது.

5 ஆண்டுகள் இந்த சட்டப்பேரவையில் முழுமையாக செயல்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில், உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசமின்றி அனைவரும் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நல்ல துணைநிலை ஆளுநரை பெற்றுள்ள சூழ்நிலையில், இதனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதுச்சேரியின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்து செல்லும் முதல் நபராக துணைநிலை ஆளுநர் இருக்க வேண்டும்.’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in