

கடந்த ஆண்டு வார்தா புயல் தாக்குதலால் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்ததால் இந்த மாவட்டங்களில் பசுமை போர்வை குறைந்தது. இதை மீட்டெடுக்கும் விதமாக 10 கடலோர மாவட்டங்களில் ‘தி இந்து’ குழுமம் மற்றும் ஹமாம் நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் வேப்பமரக் கன்றுகள் நட திட்டமிடப்பட்டது.
அதன்படி, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தை பசுமை புத்தாண்டாக கொண்டாடியதுடன், வேப்பமரம் நடும் திட்டமும் தொடங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 4-ம் தேதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தை பசுமை புத்தாண்டாக கொண்டாடியதுடன், வேப்பமரம் நடும் திட்டமும் தொடங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 4-ம் தேதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் சீமைக் கருவேல மரங்கள் அதிக அளவில் அகற்றப்பட்ட மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பசுமை போர்வை குறைந்துள்ளது. எனவே, சீமைக் கருவேல மரங்கள் அதிகம் அகற்றப்பட்ட 4 மாவட்டங்களுக்கும் வேப்பமரம் நடும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தப் பணியில் தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஏற்கெனவே அறிவித்தபடி, உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று டன் வேப்பமரம் நடும் திட்டம் நிறைவு பெற்றது. சென்னையில் இத்திட்டத்தின் நிறைவு விழா, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந் தது. விழாவில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை இயக்குநர் எச்.மல்லேசப்பா பங்கேற்று மரக்கன்று களை நட்டு, திட்டத்தை நிறைவு செய்தார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘‘வேப்பமரம் மருத்துவ குணமும், எந்தச் சூழலையும் தாங்கி, எந்த மண்ணிலும் வளரக்கூடிய திறனும் கொண்டது. கிராம மக்கள் காலைப் பொழுதை வேப்பங்குச்சியைக் கொண்டு பல் துலக்கியவாறே தொடங்குகின்றனர். வேம்பு மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
இத்தகைய மரத்தை நட தேர்வு செய்திருப்பதும், 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மேற்கொண்டு இருப்பதும் பாராட்டுக் குரியது. இதுபோன்று மரக்கன்று நடுவதில் மக்கள் பங்களிப்பை செலுத்துவதன் மூலம் தமிழகத்தில் 33 சதவீத பசுமை போர்வை இலக்கு எளிதில் சாத்தியமாகும்’’ என்றார்.
நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது, ‘‘சமூக பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர் கள் அதிக அளவில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர். இந்த மரம் நடும் திட்டத்தை ‘தி இந்து’வும், ஹமாம் நிறுவனமும் தொடங்கி, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
மாநிலக் கல்லூரி முதல்வர் டி.பிரம்மானந்த பெருமாள், ‘தி இந்து’ நிறுவன சென்னை மண்டல பொது மேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் உள்ள ஆசான் பல் மருத்துவக் கல்லூரியில் நடந்த நிறைவு விழாவில் செங்கல்பட்டு வனச்சரகர் கேசவன், காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்க தலைவர் மரம் மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு, மரங்களை நட்டு திட்டத்தை நிறைவு செய்தனர். விழாவில் திருப்போரூர் தனி வட்டாட்சியர் சரவணன், ஆசான் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் ஜெயா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த நிறைவு விழாவில் மாவட்ட வன அலுவலர் பி.முஹம்மத் ஷபாப், மரக்கன்றுகளை நட்டார். விழாவில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் விஜயராகவன், செங்குன்றம் மற்றும் பொன்னேரி வனச் சரகர்கள் மதன்குமார், அசோக்குமார், ‘தி இந்து’ விற்பனை பிரிவு மண்டல துணை மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.