விமான நிலையம் போல அதிநவீன வசதிகளுடன் பறக்கும் பாதை ரயில் நிலையங்கள்

விமான நிலையம் போல அதிநவீன வசதிகளுடன் பறக்கும் பாதை ரயில் நிலையங்கள்
Updated on
2 min read

விமான நிலையத்தைப் போல ரூ.13 கோடி செலவில் 5 பறக்கும் பாதை ரயில் நிலையங்களில் அதிநவீன வசதிகள் உருவாக்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயில்

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக இருவழித் தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை மற்றும் பறக்கும் பாதை அமைக்கப்படுகிறது. முதலாவது வழித்தடம் வண்ணாரப்பேட்டை விமான நிலையம் (அண்ணாசாலை, கிண்டி வழியாக) வரையிலும், இரண்டாவது வழித்தடம் சென்னை சென்ட்ரல் பரங்கிமலை (கீழ்பாக்கம், திருமங்கலம், கோயம்பேடு, சிட்கோ வழியாக) வரையிலும் அமைக்கப்படுகிறது.

வரும் ஜூனில் ரயில்

முதல்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, ரூ.32 கோடி செலவில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட 4 பெட்டிகள் கொண்ட முதலாவது மெட்ரோ ரயில், பிரேசில் நாட்டில் இருந்து கப்பல் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. முதலாவது மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை கோயம்பேடு பணிமனையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் தொடங்கிவைத்தார். இதையடுத்து மெட்ரோ ரயில் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

கோயம்பேடு - ஆலந்தூர்

பரங்கிமலையில் கட்டப்படும் பிரமாண்ட ரயில் நிலையப் பணிகள் முடிவடைய தாமதமாகும் என்பதால், கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

முதலாவது மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு இன்னமும் 7 மாதங்களே உள்ள நிலையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உள்ள பறக்கும் ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ரூ.13 கோடியில் வசதிகள்

கட்டுமானப் பணிகள் முடிந்துள்ள கோயம்பேடு, சென்னை புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி.), அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர் ஆகிய 5 பறக்கும் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் விமான நிலையங்களைப் போன்ற அதிநவீன வசதிகள் ரூ.13 கோடி செலவில் செய்யப்படவுள்ளன.

இந்த ரயில் நிலையங்கள், விமான நிலையங்களைப் போல பளிச்சென பராமரிக்கப்படும். 24 மணி நேர பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். நவீன முறையில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மின்கசிவு ஏற்பட்டாலோ, குடிநீர் குழாய் உள்ளிட்டவற்றில் உடைப்பு ஏற்பட்டாலோ, பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை உடனடியாகச் சரிசெய்ய சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

மேற்கண்ட 5 பறக்கும் பாதை மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்ததும் ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், பரங்கிமலை ரயில் நிலையங்களில் அதிநவீன வசதிகள் உருவாக்கப்படும்.

3 துணை மின் நிலையங்கள்

மெட்ரோ ரயில்கள் முழுவதும் மின்சாரத்தில் இயக்கப்படும். இதற்காக கோயம்பேடு, ஆலந்தூர், சென்னை சென்ட்ரல் ஆகிய 3 இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில், கோயம்பேட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது. ஆலந்தூரில் பணிகள் நடக்கின்றன. சென்னை சென்ட்ரல் அருகே புகாரி ஓட்டல் இருக்கும் இடத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அங்கு துணை மின் நிலையம் அமைக்கும் பணி தாமதமாகத் தொடங்கும்.

மெட்ரோ ரயிலை இயக்க 25 கிலோ வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படும். 133 கிலோ வோல்ட் மின்சாரம், ரயில் பாதைகள், ரயில் நிலையங்களில் மின்விளக்குகள் மற்றும் மின் மோட்டார்கள் இயக்குதல் போன்ற வற்றுக்காகப் பயன்படுத்தப்படும்.

விரைவில் கட்டண நிர்ணயம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “மெட்ரோ ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் விரைவில் முடிவு செய்யப்படுகிறது. பெரும் பொருள் செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரயில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்று பேச்சு அடிபடுகிறது. அதுபோல கூடுதலாக இருக்காது. அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில், மின்சார ரயில், பறக்கும் ரயில், மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

3 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

நெரிசல் நேரத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும். மெட்ரோ ரயில்கள், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்கு செல்லுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. அதுபோல சந்தேகம் தேவையே இல்லை. ஏனென்றால், மெட்ரோ ரயிலைப் பொருத்தவரை ரயில் போவதற்கும், வருவதற்கும் தனித்தனிப் பாதை, கிராசிங் இல்லை, லெவல் கிராசிங் கிடையாது, யாரும் பறக்கும் பாதை மற்றும் சுரங்கப் பாதையின் குறுக்கே செல்ல முடியாது. அதனால், குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் மெட்ரோ ரயில் நிச்சயம் சென்றடையும். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in