

நொய்யலாற்றின் பெயர்க் காரணியாக விளங்குவது நொய்யல் கிராமம். கோவையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் க.பரமத்தி சென்று, அங்கிருந்து கொடுமுடி சாலையில் 15 கிலோமீட்டர் பயணித்தால் எட்டுகிறது இந்தக் கிராமம்.
இதற்கு 4 கிலோமீட்டர் முன்பே குப்பம் கிரஸ்ஸர் ரோடு பகுதியில் மேற்கிலிருந்து பாசன வாய்க்கால் கிழக்குச் நோக்கிச் செல்கிறது. இது, கார்வழி ஆத்துப்பாளையம் அணையிலிருந்து புறப்பட்டு வரும் பாசன வாய்க்கால்.
அங்கிருந்து அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, தென்னிலை கீழ், தென்னிலை மேல், முன்னூர், குப்பம் என 20 கிலோமீட்டர் தொலைவு வந்து இங்கு குறுக்கிடுகிறது.
மேலும், அத்திப்பாளையம், புன்னம், வேட்டைமங்கலம், புஞ்சைபுகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, கடமாங்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், காதாப்பாறை, பஞ்சமாதேவி என 30 கிலோமீட்டர் சென்று மின்னாம்பள்ளி ஊராட்சியை அடைகிறது இந்த வாய்க்கால்.
ஒரத்துப்பாளையம் அணையால் பாசன வசதி பெறும் இந்த 18 ஊராட்சிகளும், 20 ஆண்டுகள் முன் வந்த சாயநீரால் பாழாகின. இப்பகுதி மக்கள் தற்போதும் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்த பாசன வாய்க்கால் நொய்யலின் பயணப் பாதைக்கு 2 கிலோமீட்டர் முதல் 5 கிலோமீட்டர் இடைவெளியில் இணையாகவும், சில இடங்களில் நெருக்கமாகவும் செல்கிறது. தவிர, நொய்யல் காவிரியில் கலக்கும் இடத்தைத் தாண்டி வேறுதிசையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவு வரை வாய்க்கால் செல்கிறது.
பாதிக்கப்பட்ட 18 ஊராட்சிகள்
இந்த 18 ஊராட்சிகளில் 2 ஆயிரம் ஏக்கர் ஆற்றுப் பாசனம், 18 ஆயிரம் ஏக்கர் வாய்க்கால் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் விவசாயிகள், 10 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் என்று விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி சின்னமுத்தூர், கார்வழி ஆத்துப்பாளையம் அணைகளில் 2008-ம் ஆண்டிலிருந்து நீர் தேக்காததால், பாசன வாய்க்கால்கள் காய்ந்துள்ளன. அதேசமயம், இப்பகுதிகளில் உள்ள கல் குவாரிகளால் சூழல்கேடு ஏற்படுகிறது.
பரமத்தி-கொடுமுடி சாலையில் கிரஸ்ஸர் குப்ப பாசன வாய்க்காலைத் தாண்டி 4 கிலோமீட்டர் சென்றால் நொய்யல் கிராமம் உள்ளது. இங்கிருந்து இடதுபக்கம் சென்றால் காவிரியுடன் நொய்யல் கலக்கும் இடமும், அதற்கு முன்னதாக பழங்கால நொய்யல் அணைக்கட்டும் உள்ளது. இந்த அணை கட்டப்பட்ட காலம், மதகுகள் திறக்கப்பட்ட விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.
நொய்யல் கிராமம் கோம்புபாளையம், வேட்டமங்கலம் என 2 ஊராட்சிகளின்கீழ் உள்ளது. இங்கு 150 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இந்த ஊராட்சிகள் காவிரி ஆயக்கட்டு பாசன உரிமம் பெற்றுள்ளன. இதற்காக காவிரி கிளை வாய்க்கால் பிரிந்து, நொய்யல் தடத்திலேயே ஊருக்குள் வருகிறது. இந்த வாய்க்கால் மதகுகளும், நொய்யல் கிராம அணைக்கட்டும் அடுத்தடுத்து உள்ளன.
காவிரி வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருகிறது. நொய்யல் ஆறு வருடத்தில் பாதி நாட்கள் வறண்டு காணப்படுகிறது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் வரை, நொய்யலில் நீர் வரும்போது, காவிரி வாய்க்கால் குறுக்கிடுவதை பொருட்படுத்தாது இரண்டிலுமே மக்கள் குளித்துள்ளனர்.
நொய்யலை புறக்கணித்த மக்கள்
1996-க்குப் பிறகு வாந்தி, பேதி, காலரா, வயிற்று உபாதைகள், தோல் நோய்கள், சிறுநீரகப் பிரச்சினை போன்றவற்றுக்கு நொய்யல் ஆற்றில் வந்த சலவை, சாய ஆலைக்கழிவுகள்தான் காரணம் என்பதை உணர்ந்த மக்கள், நொய்யலை புறக்கணிக்கத் தொடங்கினர்.
அதற்காக, காவிரி வாய்க்கால் நொய்யலில் குறுக்கிடும் இடத்துக்கு கீழே சுரங்கம் தோண்டி, குழாய் அமைத்து, தனியே காவிரி வாய்க்காலுக்கு வழி ஏற்படுத்தியுள்ளனர்.
காவிரி வாய்க்காலில் குளித்து, துணிகள் துவைக்கும் மக்கள், அருகில் உள்ள நொய்யல் ஆற்றை, தண்ணீர் வரும் காலங்களில்கூட கண்டுகொள்வதில்லை. இதனால் நொய்யல் அணைக்கட்டுக் கால்வாய் செடிகள், முட்புதர்களுடன் உள்ளது. அங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் நொய்யல், காவிரியில் கலக்கும் இடம் உள்ளது.
இங்கு, பாறைகள், ஆங்காங்கே குட்டைபோல மாசு நீர், மணல் திட்டுகள், சரளைக்கற்கள் நிறைந்துள்ளன. காவிரியில் நொய்யல் சேரும் இடத்துக்கு வலதுபுறத்தில் 250 மீட்டர் தொலைவில் மண் ஏரியும், சுமார் 20 அடி உயரத்தில், 250 அடி நீள தடுப்புச் சுவரும் காணப்படுகிறது.
1999-ல் நொய்யல் கரையில் பாதி, காவிரிக் கரையில் பாதி என இந்த ஏரி அமைக்கப்பட்டு, இதன் மூலம் நொய்யலாற்றின் திசையே மாற்றப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது காவிரியும், நொய்யலும் இணையும் பகுதிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றங்கரையில் காகித ஆலை செயல்படுகிறது. நொய்யல் இங்கிருந்து காவிரிக்கு இணையாகச் சென்று, 10 கிலோமீட்டர் தொலைவில் அந்த காகித ஆலை இருந்த பகுதியில்தான் முன் காவிரியில் கலந்தது. ஆலையின் தேவைக்கு அங்குள்ள ஆற்று நீரே பயன்படுத்தப்பட்டுள்ளது. சலவை, சாயக் கழிவு நீரைப் பயன்படுத்தியதால், ஆலையில் தயாரிக்கப்பட்ட காகிதங்கள் பழுப்பு நிறத்தில் இருந்துள்ளன.
இதனால், சலவை, சாயக் கழிவுநீரைக் கொண்டுவரும் நொய்யல் ஆற்றில் ஏரியை அமைத்து, 10 கிலோமீட்டர் தொலைவுக்குமுன்பே காவிரியில் நொய்யலைக் கலக்குமாறு செய்துவிட்டது அந்த ஆலை. இதையடுத்து, காகித ஆலைப்பகுதிக்கு வரும் ஆற்று நீரில் சாயக்கழிவின் அடர்வுத் தன்மை மிகவும் குறைந்து விட்டதாம்.
இதுகுறித்து கரூர் நொய்யல் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மா.ராமசாமி ‘தி இந்து’விடம் கூறியது: முன்பு கிரிக்கெட் மைதானம்போல இருந்த இந்த ஏரிக்கரையில் பசும்புற்கள் நிறைந்திருக்கும்.
2002-ல் சாயக்கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக, சூழலியல் இழப்பீட்டு ஆணையத்தை அணுகுமாறு விவசாயிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, ஏற்கெனவே வேலூர் தோல் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்த சூழலியல் இழப்பீட்டு ஆணையத்தை, நொய்யலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அணுகினர்.
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி, அறிக்கை தருமாறு ஆணையம் உத்தரவிட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகள் ஆய்வில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர், ஆணையத்திடம் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
அதனடிப்படையில் 28,596 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குமாறும், அந்த தொகையை சாய ஆலை உரிமையாளர்களிடம் வசூல் செய்யுமாறும் 2004-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விவசாயிகளுக்கான பாதிப்புகள், நகரங்கள், கிராமங்கள் என தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. முறையான கணக்கெடுப்பு நடக்கவில்லை என்று புகார் தெரிவித்து, பல்வேறு சங்கங்கள் நீதிமன்றத்தை நாடின. அதேசமயம், ஒரு விவசாயிகள் சங்கம், தாங்கள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதுபோன்ற தோற்றத்தை அரசிடம் உருவாக்கிவிட்டது.
நஷ்டஈடு பெறும்வரை ஓயமாட்டோம்
இதனால், 2011-ல் 535 விவசாயிகளுக்கு மட்டுமே நஷ்டஈடு வழங்க அப்போதைய அரசு உத்தரவிட்டது. அப்போது சிலர் மட்டும் லட்சக்கணக்கில் இழப்பீடு பெற்றனர். 28 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இழப்பீடு என்பது எப்படி நியாயமாகும்? எனவே, அதை எதிர்த்தும் பல்வேறு சங்கங்கள் நீதிமன்றத்தை நாடின. எங்கள் சங்கம் சார்பில் 2 ஆயிரம் விவசாயிகளுக்காக வழக்குத் தொடர்ந்தோம். இதில், எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். சாயப்பட்டறை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் இதுவரை செலுத்தியுள்ள இழப்பீட்டுத் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.100 கோடி உள்ளதாகத் தெரிகிறது. இது எப்படி போதுமானதாக இருக்கும்? மேலும், சாயப்பட்டறைகள் கழிவுகளை ஆற்றில் தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதையும் தனியாக கணக்கிட வேண்டும். எனவே, விவசாயிகளுக்கு முழுமையான நஷ்டஈட்டை நிச்சயம் வழங்க வேண்டும். அதைப் பெறும்வரை விவசாயிகள் ஓயப்போவதில்லை என்றார்.
- பயணிக்கும்...