மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாசன் வலியுறுத்தல்

மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாசன் வலியுறுத்தல்
Updated on
2 min read

பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்திற்கு நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு முறையில் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. இந்த நீட் தேர்வு முறையால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர்வதிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் - கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் இரண்டாண்டு பணிபுரிந்த பிறகு அவர்கள் முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர, சென்ற ஆண்டு வரை 50 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு பெற்று வந்தனர். இதன் மூலம் சுமார் 600 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பயன் பெற்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் சேவை அதிகரித்ததால் ஏழை, எளிய மக்கள் பெரும் பயனடைந்தனர்.

பல மாநிலங்களை விட தமிழகம் மருத்துவத்துறையிலும், மனித வளக்குறியீட்டிலும் முன்னேறி இருக்கின்றது. இந்நிலையில் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக உயர் நீதிமன்றம் 17.04.2017 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு கிடைத்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தால் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுத்து உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடுகளும், மாணவர் சேர்க்கை நடைமுறைகளும் தொடரும் வகையில் - இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் அவசரச் சட்டம் மூலம் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் தொடர் மருத்துவச் சேவைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீட் தேர்வு முறையினால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப்படிப்புகளில் சேர்வதில் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அதே போல மருத்துவ உயர் கல்வியில் கிராமப்புறத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு பாதிப்பினால் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை கிராமப்புற மருத்துவமனைகளில் குறைந்து பொது மக்களுக்கான சிறப்பு மருத்துவச் சேவை பெரிதளவில் பாதிக்கும்.

எனவே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிக்கவும், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு உரிய 50 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கிடவும் மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in