

கும்பகோணத்தில் போக்குவரத்து குளறுபடியால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும், சிறப்பு ரயில், பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
மகாமகப் பெருவிழாவை யொட்டி கும்பகோணம் புறவழிச் சாலையில் தாராசுரம் வளையபேட்டை, அசூர், கொரநாட்டுக் கருப்பூர், செட்டிமண்டபம், சாக்கோட்டை நாட்டார் தலைப்பு மற்றும் உள்ளூர் ஆகிய 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 18-ம் தேதி முதல் மாநிலம் முழுவதிலுமிருந்து 2,800 சிறப்புப் பேருந்துகள் கும்பகோணத்துக்கு இயக்கப்படுகின்றன.
தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் தாராசுரம் புறவழிச்சாலை வழியாகச் சென்று, கொரநாட்டுக்கருப்பூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், தாராசுரம் வளையப்பேட்டை தற்காலிக பேருந்து நிலையம் வருகின்றன. பின்னர், அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
சென்னை வழித்தடத்தில் வரும் பேருந்துகள் உள்ளூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், அசூர் தற்காலிக பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
மயிலாடுதுறை, காரைக்கால் வழித்தட பேருந்துகள் செட்டிமண்டபத்திலும், திருவாரூர், மன்னார்குடி வழித்தட பேருந்துகள் சாக்கோட்டை நாட்டார் தலைப்பு தற்காலிக பேருந்து நிலையங்களிலும் பயணிகளை இறக்கிவிடுகின்றன.
இந்தப் பேருந்து நிலையங்களில் சிறப்பு மருத்து முகாம், அன்னதான மையம், கழிப்பிடங்கள், குடிநீர் மற்றும் பொருட்கள் விற்பனைக் கடைகள், நடமாடும் செல்போன் டவர்கள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏமாற்றிய மினி பஸ்கள்…
இந்தப் பேருந்து நிலையங்களிலிருந்து மகாமகக் குளத்துக்கு நீராட வரவும், நீராடியவர்களை திரும்ப அழைத்துச் செல்லவும் 100-க்கும் மேற்பட்ட மினி பஸ்களும், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களை அழைத்துச் செல்ல தனியார் கல்வி நிறுவனங்களின் வாகனங்களும் இலவசமாக இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், பெரும்பாலான வாகனங்கள் அறிவித்தபடி முறையாக இயக்கப்படவில்லை.
இதனால், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் ஆகியோர் பல கிலோமீட்டர் தூரம் கடும் வெயிலில் நடந்து செல்கின்றனர். தாராசுரம் வளையப்பேட்டை, அசூர் பேருந்து நிலையங்களுக்குச் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கட்டணம் வசூல்…
இந்த 6 தற்காலிகப் பேருந்து நிலையங்களையும் இணைக்கும் வகையில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இதற்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டண வசூலால் அதிர்ச்சிக்குள்ளாகும் பயணிகள் பலர், அந்தப் பேருந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்த்தனர்.
மேலும், இணைப்புப் பேருந்துகள் வெளியூர்களில் இருந்து வந்தவை என்பதால், “குளத்துக்குச் செல்ல எங்கு இறங்க வேண்டும்?” என்று கேட்கும் வெளியூர் பக்தர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் நடத்துநர்கள் விழித்தனர். இதனால், பக்தர்கள் எந்த இடத்தில் இறங்குவது எனத் தெரியாமல் தவித்தனர். இந்த இணைப்புப் பேருந்துகளுக்கு உள்ளூர் நடத்துநர்களை நியமித்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
நெருக்கடியில் புறவழிச் சாலை…
தற்காலிக பேருந்து நிலையங்கள் அனைத்தும் புறவழிச் சாலையிலேயே அமைக்கப்பட்டதாலும், வெளியூர் வாகனங்கள் அங்கேயே திருப்பி விடப்படுவதாலும் புறவழிச் சாலையில் கடும் போக்குவரது நெருக்கடி ஏற்பட்டது.
கார்கள், வேன்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களை ஊருக்கு வெளியிலேயே நிறுத்தி, அதில் வந்தவர்களை அங்கிருந்து மினி பஸ், வேன்களில் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
ரயிலில் கூடுதல் கட்டணம்…
மகாமகப் பெருவிழாவை யொட்டி கடந்த 13-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்ல ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக பயணிகள் ரயிலில் ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், 3 மடங்கு கட்டணம் வசூலிப்பது பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சையில் ஏறினாலும், 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஏறினாலும் ரூ.30 கட்டணமே வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.