Last Updated : 07 Feb, 2017 05:36 PM

 

Published : 07 Feb 2017 05:36 PM
Last Updated : 07 Feb 2017 05:36 PM

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு வராத அதிமுக எம்பிக்கள்: திடீர் உத்தரவால் டெல்லி வந்தவர்களும் திரும்பினர்

நாடாளுமன்ற இருஅவைகளிலும் அதிமுக எம்பிக்கள் வரவில்லை. கட்சியில் இருந்து வந்த திடீர் உத்தரவால் டெல்லியில் இருந்தவர்கள் மற்றும் வந்தவர்களும் காலையில் தமிழகம் திரும்பினர்.

கடந்த 31 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 9 வரை என நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தை முடித்து வழக்கம் போல் அதிமுக எம்பிக்கள் தமிழகம் திரும்பினர். இதேபோல், நேற்று திங்கள்கிழமை கூடிய கூட்டத்தில் கலந்து கொள்ள ஞாயிறு மாலை கிளம்பத் தயாராக இருந்தனர். ஆனால், அதிமுக தலைமையகத்தில் வந்த திடீர் உத்தரவு காரணமாக அவர்கள் பயணம் ரத்து செய்ய வேண்டியதாயிற்று. இந்த தகவல் கிடைக்காமல் சில எம்பிக்கள் டெல்லி வந்து சேர்ந்திருந்தனர்.

மேலும் ஒருசிலர் வார விடுமுறையில் தமிழகம் செல்லாமல் டெல்லியிலேயே தங்கி விட்டனர். இவர்கள், மறுநாள் நாடளுமன்றக் கூட்டத்திற்கும் கிளம்பி வந்தனர். ஆனால், அவை துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அவர்களுக்கும் தகவல் கிடைத்தது. இதன்படி, அந்த எம்பிக்களும் அவைகளுக்கு செல்லாமல் அடுத்து சென்னை கிளம்பிய விமானத்தில் ஏறி தமிழகம் திரும்பினர். துணைசபாநாயகரான எம்.தம்பிதுரையும் தன் சகஎம்பிக்கள் போல், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து மாலை கிளம்பும் விமானத்தில் பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ரத்து செய்தார்.

இது குறித்து அதிமுக எம்பிக்கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘எங்கள் கட்சியின் முதல் அமைச்சர் மாற்றத்தால், தமிழகத்தில் நிலவும் திடீர் அரசியல் அதிர்வு காரணமாக எங்களை சென்னையில் தங்கி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதியம் சுமார் 3.00 மணிக்கு அனுப்பப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் பலரும் சென்னை வந்து தங்கி விட்டோம். மற்றவர்களுக்கு தகவல் தாமதமாக சேர்ந்த வகையில் வந்து சேர்ந்தனர். எனவே, இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டும் நடைபெறும் அவைக்கு வருவது சந்தேகமே. இங்கு எங்கள் சின்னம்மா முதல்வராகப் பதவி ஏற்பதால் அது குறித்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு செய்வது உட்பட சில வேலைகள் இருப்பதால் இந்த திடீர் உத்தரவு.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் மீதான விவாதம் தற்போது இருஅவைகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் முக்கியத்துவம் கருதி அதிமுகவின் மக்களவை தலைவரான டாக்டர்.பி.வேணுகோபாலுக்கு மட்டும் கட்சி உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், வேணுகோபால் மட்டும் மக்களவை நடவடிக்கைகளில் தனியாகக் கலந்து கொள்கிறார். மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது அதிமுக. இதற்கு மக்களவையில் 37 மற்றும் மாநிலங்களவையில் 13 என மொத்தம் 50 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதுபோல், அதிமுக உறுப்பினர்கள் இருஅவைகளுக்கு வராமல் இருப்பது முதன்முறை அல்ல. கடந்த வருடம் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, டிசம்பர் 3 ஆம் தேதி தமிழகம் திரும்பியவர்கள் மீண்டும் டெல்லிக்கு வரவில்லை. இதற்கு உடல்நிலை சரியில்லாமல் அப்போலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உயிர் அதே மாதம் 5 ஆம் தேதி இரவு பிரிந்தது காரணமாயிற்று. இதில், அதிமுக உறுப்பினர்கள் அந்த கூட்டத்தொடர் முடியும் வரை தனால், வாரவிடுமுறைக்கு பின் கூடிய குளிர்காலக் கூட்டத்தொடருக்கு சுமார் 10 நாட்கள் வராமல் இருந்து விட்டனர். இதற்கு பின் நேற்று முதல் வராமல் இருப்பது இரண்டாவது முறை ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x