

சென்னையில் தென் மாநில பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். நாட்டின் பாது காப்பிலும் வளர்ச்சியிலும் ஊடகங்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. பரபரப்புக்காக ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிடக்கூடாது என்று தெரிவித்தார்.
மத்திய பத்திரிகை தகவல் அலுவ லகம் (பிஐபி) சார்பில் ஊடக ஆசிரியர் களுக்கான மாநாடு அவ்வப்போது டெல்லியில் நடத்தப்படும். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு, முதல்முறையாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இம்மாநாடு நடத்தப்பட்டது. 2-வது மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.
இந்த 2 நாள் மாநாட்டில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் பங்கேற் றனர். மாநாட்டை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
இந்தியாவில் 24 மணிநேர சேனல்கள், பத்திரிகைகள், இணைய தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஊடகங்களுக்குள் போட்டி இருக் கலாம். அதற்காக தவறான செய்தி களை தரக்கூடாது. பரபரப்புக்காக பொய்யான செய்திகளை முந்திச் சொல்லாமல், உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். செய்திகளை வெளியிடுவதில் சுய மதிப்பீடு, ஒழுங்குமுறை அவசியம். அரசு பற்றிய விமர்சனங்களை ஊடகங்கள் முன்வைப்பதோடு, அரசின் நல்ல திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
கருத்து சுதந்திரம் அவசியம். அதே நேரம், அது நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுக்கு எதிராக அமைந்துவிடக் கூடாது. தேசம், சமூகப் பாதுகாப்பில் ஊடகங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது.
வளர்ச்சிப் பாதையில் அச்சு ஊடகம்
சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட தால், உலகம் முழுவதும் அச்சு ஊடகங்களுக்கான வரவேற்பு குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அச்சு ஊடகங்களின் சந்தை வருவாய் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. தரம், உண்மை, பொறுப்புணர்வு ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.
டிஜிட்டல் புரட்சி
மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, ‘‘நாடு முழுவதும் சிறு நகரங்களில் 48 ஆயிரம் பிபீஓ நிறுவனங்கள் தொடங்கப்படும். இ-மருத்துவமனை சேவை மூலம் 43 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்தியாவில் மின்னணு கருவிகள் உற்பத்தி ரூ.11 ஆயிரம் கோடியாக இருந்தது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு பிறகு அது ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. 1960, 70-களில் நடந்த தொழிற்புரட்சியை இந்தியா தவறவிட்டது. ஆனால், அடுத்து வரவுள்ள டிஜிட்டல் புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். நாடு முழுவதும் கண்ணாடி இழை கேபிள் பதிப்பது, பொது சேவை மையங்கள் மூலம் சேவை வழங்குவது, கிராமங்கள் வரை இணைய சேவை, அஞ்சல் வங்கி சேவை, மெய்நிகர் (வர்ச்சுவல்) செல்போன் நெட்ஒர்க் ஆகிய 5 திட்டங்கள் இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் ஏ.பி.ஃப்ராங் நொரோனா, சென்னை மண்டல பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் இயக்குநர் கே.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாடு இன்றும் நடக்கிறது.