

திருவள்ளூர் மாவட்டம் பழவேற் காடு ஏரியை ஒட்டி 10-க்கும் மேற் பட்ட மீனவ கிராமங்களில் வசித்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், 1984-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்காக அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டனர்.
அவ்வாறு அப்புறப்படுத்தப் பட்ட குடும்பங்களுக்கு பழவேற் காடுவை சுற்றி மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில், கரிமணல் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 24 குடும்பங்களுக்கு 1986-ம் ஆண்டு லைட்ஹவுஸ் குப்பம் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நிலம் ஒதுக்கி வீட்டுமனை பட்டாவை வழங்கியது அரசு.
அரசு வழங்கிய அந்நிலம், தாழ்வான பகுதியாக இருந்ததால் அருகே இருந்த மேடான பகுதியான அரசு புறம்போக்கு நிலத்தில் அந்த மீனவ மக்கள் வசிக்கத் தொடங்கினர்.
கடந்த 30 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 24 குடும்பங்கள் இன்று, 125 குடும்பங்களாகிவிட்டன. ஆனால், அந்த மீனவ மக்கள் தற்போது வசிக்கும் நிலத்துக்கு பட்டா இல்லை. அதே நேரத்தில், அவர்களுக்கு ஏற்கெனவே அரசு வழங்கிய நிலம், 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் அது அரசு நிலமாகிவிட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே அரசு ஒதுக்கிய நிலத்தில் குடியேற கரிமணல் கிராமவாசிகள் அனுமதி கோரினர். இதற்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன் வருவாய்த் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதற்கு பழவேற்காடுவைச் சுற்றியுள்ள மற்ற கிராம மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட நிலத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
இதையடுத்து, அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதைக் கண்டித்து கரிமணல் குப்பத்தில் மீனவ மக்கள் கடந்த மாதம் 10-ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.
எனினும், 25 நாட்களாகியும் சார்-ஆட்சியர் அளித்த உறுதி மொழியின்படி, நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள மீனவ மக்கள், நேற்று அதிகாலை 3 மணியளவில் கரிமணல் குப்பத்தினை காலி செய்துக் கொண்டு, தாங்கள் ஏற்கெனவே வசித்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள ஆந்திர பகுதியில் குடியேற ஆந்திர பகுதிக்கு நடந்துச் செல்ல தொடங்கினார்.
120-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் குடும்பத்துடன் பாய், தலையணை, உடைகள், ஆடு, மாடு உள்ளிட்ட பொருட்களுடன் நடந்து சென்று, பழவேற்காட்டில் இருந்து 19 கி.மீ., தூரத்தில் உள்ள பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று காலை 8 மணியளவில் முற்றுகையிட்டனர். அப்போது, கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால், தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ஆந்திர பகுதியை நோக்கி, பொன்னேரி-தச்சூர் சாலையில் நடந்து சென்றனர். அப்போது, பொன்னேரி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலை யோரத்தில் சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி சார்-ஆட்சியர் தண்ட பாணி தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர்.
அதற்கு மீனவ மக்கள் உடன் படாததால் பதற்றம் ஏற்பட்டது. கிருஷ்ணாபுரம் பகுதியில் மாவட்ட கூடுதல் எஸ்.பி. ஸ்டாலின் தலைமை யில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீ ஸார் குவிக்கப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் முத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய அவர், பழவேற்காடு-கரிமணல் மீனவ மக்களுக்கு ஏற்கெனவே அரசு ஒதுக்கிய நிலத்தை 10 நாட் களுக்குள் அளவீடு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.