

அதிமுகவில் பொதுச் செயலாளரை கொடி கட்டும் சாதாரண தொண்டர் தேர்ந்தெடுக்கும் காலம் விரைவில் வரும் என ஓபிஎஸ் அணியை சேர்ந்த சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.மாணிக்கம் தெரிவித்துள்ளார். அவருக்கு நேற்று தொகுதியில் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல் ஆளாக ஆதரவு அளித்தவர் சோழவந்தான் எம்எல்ஏ கே.மாணிக்கம். சட்டப்பேரவை வாக்கெடுப்புக்குப்பின் நேற்று முதல்முறையாக தொகுதிக்கு வந்தார். வாடிப்பட்டியிலுள்ள எம்எல்ஏ அலுவலகம் மற்றும் அலங்காநல்லூர், பாலமேடு, சமய நல்லூர் என பல இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அவருக்கு தொண் டர்கள் வரவேற்பளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். வாடிப்பட்டியில் நடந்த வரவேற்பில் அதிமுகவைச் சேர்ந்த காளிதாஸ், ராஜேஷ்கண்ணா, துரைநடராஜன், சரவணன், வீரபாகு, தீபா பேரவை சார்பாக ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், ஞானசேகரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
எம்எல்ஏ மாணிக்கம் பேசியது: சோதனையான காலகட்டத்தில் உங்களை மனதில் வைத்து தைரியமாக முடிவெடுத்தேன். அந்த முடிவுக்கு நீங்கள் ஆதரவு தந்தீர்கள்.
நான் எடுத்த முடிவு மக்களின் ஏகோபித்த முடிவு என்பதை இன்று அளித்த வரவேற்பு உறுதிப்படுத்துகிறது. இதுவே எனக்கு போதும். அதிமுகவுக்கு சோதனைக்காலம் வரும்போது, கட்சிக்கொடியை கட்டும் தொண்டன் வாக்களித்து பொதுச்செயலாளரை தேர்ந்தெ டுக்கும் வகையில் சட்ட விதிகளை எம்ஜிஆர் உருவாக்கியுள்ளார். அதை நிரூபிக்கும் வகையில், அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளரை விரைவில் தொண்டர்களாகிய நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். அதனால் உங்களது உறுப்பினர் அட்டையை கேட்டுவாங்கி சரிபார்த்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக நல்ல முடிவு வரும். நம்பிக்கையோடு காத்திருங்கள் என்றார்.