மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் 100 நாள் வேலை தர மறுப்பதாக புகார்: ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் 100 நாள் வேலை தர மறுப்பதாக புகார்: ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு
Updated on
2 min read

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படாது என ஆளுங் கட்சியினர் மிரட்டுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 5,672 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வந்தன. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3,321 மதுபானக் கடை, மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இதை ஈடு செய்வதற்காக மூடப் பட்ட கடைகளுக்கு மாற்றாக நெடுஞ் சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வேறு இடத்தில் கடை திறப்பதற்கான நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு அந்தந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், முற்றுகை, ஆட்சியரிடம் மனு அளித்தல் உள்ளிட்ட பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட் டத்தால் டாஸ்மாக் நிறுவன அதி காரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, டாஸ் மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட் டால் அவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்க இயலாது என ஆளுங்கட்சியினர் மறைமுக மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆளுங்கட்சியினரின் இந்த மிரட்டலை வெளியில் சொல்ல இயலாத கிராம மக்கள், டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முடிவை கைவிடும் கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட் டத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியதாவது:

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யுள்ள கிராமப் பகுதியில் திறக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்து வருகின்றனர். இதை எதிர்த்து மாவட்டம் முழுவதும் பரவலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்தால் நேரிடும் சிரமங்களை கருத்தில்கொண்டே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால், மக்களின் எதிர்ப்பை மீறி மதுபானக் கடை அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆளுங்கட்சியினர் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். போராட் டத்தில் ஈடுபட்டால், ஆட்சியரிடம் மனு அளித்தால் 100 நாள் வேலை தர மாட்டோம் என உள்ளூர் ஆளுங்கட்சியினர் மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது.

விவசாயம் நலிந்துள்ள நிலை யில், 100 நாள் வேலை மட்டுமே பிழைப்புக்கு ஆதாரம். அந்த வேலை யும் கிடைக்காமல் போனால் நிலைமை மோசமாகிவிடும் என்ப தால், ஆளுங்கட்சியினர் மிரட்ட லுக்கு கட்டுப்பட வேண்டியதாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘‘மக்கள் நலன் கருதியே உச்ச நீதிமன் றம் மதுக்கடைகளை மூட உத்தர விட்டுள்ளது. இந்நிலையில், டாஸ் மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலை கொடுக்க இயலாது என சிலர் மிரட்டுவதாக தெரியவருகிறது. மக்களை மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சந்திரசேகரிடம் கேட்டபோது, ‘‘ஊராட்சிகளில் நடைபெறும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பணி ஒதுக்கீடு செய்து வழங்கப்படுகிறது. இதற்கும் உள் ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இல்லை. போராட்டம் நடத்தினால் 100 நாள் வேலை வழங்கப்படமாட்டாது என மிரட்டு வதாக இதுவரை புகார் எழ வில்லை. எனினும், இது தொடர்பாக விசாரிக்கப்படும்’’ என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in