

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்ல மாக மாற்றக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் இல்லத்தை அதிமுகவினர் பயன்படுத்தி வரு கின்றனர். அவரது நினைவாக அந்த வீட்டை அரசு நினைவு இல்லமாக மாற்றக்கோரி தமிழக தலைமை செயலாளருக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் கடந்த டிசம்பர் 9-ம் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். அதன்படி வேதா நிலையம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் வசித்த வீடுகள் நினைவு இல்லங் களாக மாற்றப்பட்டுள்ளன. அதேப் போல முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வசித்த வீட்டையும் நினைவு இல்லமாக மாற்றக் கோரிய மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த மனுவையும் ஏற்க முடியாது” என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்.