

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா முதுகுவலி யால் அவதிப்படுவதால் அவரால் நேரில் ஆஜராக முடியாது. அவரை காணொலி காட்சி முறையில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். இதன் மீதான தீர்ப்பை மே 4-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
கடந்த 1996-97ம் ஆண்டு காலகட்டத் தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது, அதற்காக வெளிநாட்டு நிறுவனங்களில் பல கோடி ரூபாயை சட்டவிரோதமாக டாலர்களாக முதலீடு செய்தது, மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக வி.கே.சசி கலா, பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை கடந்த 20 ஆண்டுகளாக எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத் தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.ஜாகிர் ஹூசைன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார் வாதிடும்போது, ‘‘சசிகலாவுக்கு முதுகு வலி உள்ளது. அவரால் பெங்களூரு சிறையில் இருந்து இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக முடியாது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உச்ச நீதிமன்றமே உத்தர விட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் சசிகலா, காணொலி காட்சி முறையில் ஆஜராக உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அம லாக்கத்துறை வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கு ஏற்கெனவே 20 ஆண்டுகளுக் கும் மேலாக நிலுவையில் இருந்து வரு கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய அவர்கள் நேரில்தான் ஆஜராக வேண்டும். என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும் காணொலி காட்சி மூலம் சசிகலாவிடம் முழுமை யாக குற்றச்சாட்டை பதிவு செய்ய இய லாது. எனவே, அவரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டுமா? இல்லை காணொலி காட்சி மூலம் ஆஜராவதா? என்ற தீர்ப்பை மே 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான பாஸ்கரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.