

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பலாத்காரம் என குற்றச்செயல்கள் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வரு கின்றன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை. தமிழகத்தில் நடைபெறுவது போலி யான ஆட்சி என குற்றஞ்சாட்டினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
திருச்சியில் திமுக 10-வது மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் அவர் மேலும் பேசியது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை எவையுமே நிறைவேற்றப்பட வில்லை. குறிப்பாக 2012-ம் ஆண்டுக்குள் 151 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப் படும் எனவும், 2012 ஆகஸ்ட் மாதத்துக்குள் மின் தட்டுப்பாடு அறவே நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையில் மின் தட்டுப்பாடு தொடர்கிறது. திமுக ஆட்சியில் ரூ.20,624 கோடி மதிப்பில் 7,798 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தையும் முழுவீச்சில் செயல்படுத்தியிருந்தால் மின்வெட்டு இருந்திருக்காது.
இதேபோன்று, சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் தினந்தோறும் ஒவ்வொரு அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால், அவற்றில் என்னென்ன திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன என்பதை அவர் பட்டியலிட முடியுமா?
2002-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் தற்போதுள்ள சட்டப்பேரவை வளாக இடம் போதுமானதாக இல்லை எனக் கூறி, புதிதாக சட்டப்பேரவை கட்டிடம் கட்டப்படுமென அறிவித்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, இது ஜெயலலிதா அறிவித்த திட்டம் என கிடப்பில் போடாமல், புதிதாக சட்டப்பேரவை வளாகத்தைக் கட்டியது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை இழுத்துப் பூட்டினார்.
அதேபோன்று அண்ணா நூற் றாண்டு நினைவு நூலகம், சமச்சீர் கல்வி முறை அனைத்தையும் முட்டுக்கட்டை போட்டு முடக் கியவர்தான் ஜெயலலிதா.
நீதிமன்றத்தின் மூலம் தடைகளை உடைத்து சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. சட்டப் பேரவையில் எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை என்பதால் தான் மக்கள் மன்றத்தில் கேட்கிறோம். இதற்கு ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும்.
மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பல மாநிலங்களை ஒப்பிட்டு, தமிழ கத்தில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2012-13-ல் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம்தான் அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியிலும் நாட்டின் சராசரிக்குக் குறைவான அளவிலேயே தமிழகம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியில் கடந்த திமுக ஆட்சியில், 17 மாநிலங்களில் 4-வது இடத்தில் இருந்த தமிழகம், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 2011-12-ம் ஆண்டில் 8-வது இடத்துக்கும், 2012-13-ம் ஆண்டில் 16-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.