எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு அஞ்சல் தலையை ஐ.நா.வெளியிடுவது இந்தியாவுக்கு பெருமை: வாசன்

எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு அஞ்சல் தலையை ஐ.நா.வெளியிடுவது இந்தியாவுக்கு பெருமை: வாசன்
Updated on
1 min read

கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவைப் போற்றி ஐ.நா.சபை சார்பில் அஞ்சல் தலை வெளியிடுவது இந்தியாவுக்கு பெருமையான விஷயமென்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேசபக்தி, தெய்வபக்தி பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிஷம் ஆகும். ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ என்று அவர் அன்று பாடிய பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும். அவரது பாடல்கள் இசைக்கலைஞர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி , ஐ.நா சபையில் 1966 ஆம் ஆண்டு பாடி உலகத் தலைவர்கள் அனைவரது பாராட்டுக்களைப் பெற்றவர். இசை ஜாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளை கடந்து உலகெங்கும் வாழும் மக்கள் கேட்டு மகிழக்கூடியது என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த நிகழ்ச்சி அமைந்தது நினைவு கூறத்தக்கது.

இத்தகைய பெருமைவாய்ந்த இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் வகையில் ஐ.நா சபை, நினைவு தபால் தலை வெளியிட்டு சிறப்பிக்க இருக்கிறது. இது அவரது புகழுக்கும் இசை உலகிற்கும், இந்தியாவிற்கும், குறிப்பாக தமிழகத்திற்கும், பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in