

தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமிக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சோலைராஜ், வெங்கடேசன், ரத்தினகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ‘தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை வரும் பொங்கல் அன்று நடத்த தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக-வின் வளர்ச்சிக்காக செயல்படும் பிரேமலதாவை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வட்டார போக்குவரத்து துறையால் உயர்த்தப்பட்ட உரிமக் கட்டண உயர்வினை கைவிட வேண்டும். சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.