

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு நண்பகல் ஒரு மணிக்கு மாற்றப்பட்டது. ஆனால், ஜெயலலிதா விடுதலை என்று காலையிலேயே தமிழகம் முழுவதும் வதந்திகள் பரவின.
பின்னர், தீர்ப்பு நேரம் முதலில் 2.30 மணிக்கு, அதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு என மாறி மாறி தகவல்கள் வெளியாயின. ஒரு வழியாக மாலை 5 மணிக்கு, தீர்ப்பு விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து, ஜெயலலிதா ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தண்டனை கிடைத்ததால், அவர் தானாகவே தகுதி இழந்துவிட்டார் என்ற தகவல் பின்னர் தான் தெரிந்தது.
பின்னர், மறியல்கள், கடை யடைப்புகளுக்கு மத்தியில் அடுத்த தமிழக முதல்வர் யார் என்று கேள்வி எழுந்தது. அப்போது, அடுத்த முதல்வர் தமிழக அரசின் ஆலோசகராக இருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் என்றும், அவர் ஆளுநரை சந்திக்கச் சென்றதாகவும் தகவல்கள் பரவின. 24 மணி நேரத்துக்கு பின்னரே, அடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்று, அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
சிறையிலடைக்கப்பட்ட ஜெயல லிதா, முதல் நாளில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட உள்ளதாக, தகவல்கள் பரவின. ஆனால், சிறை டாக்டர்களின் சிகிச்சை போதுமென்று, ஜெயலலிதா கூறியதாக சிறைத் துறை அதிகாரிகள் உறுதியான தகவலை அளித்தனர். மேலும், சிறையிலிருந்த முதல் நாளில் 4 அமைச்சர்களை மட்டும், ஜெயலலிதா சிறையில் சந்தித்தார் என்றும், ஒரு சிலரை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவர் எந்த அமைச்சரையும் சந்திக்க வில்லை என்று, பின்னரே, தெரிய வந்தது.
இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, இன்று ஜாமீன் கிடைத்துவிடும் என்று அதிமுகவினர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், முதல் மனு மீது, அக்டோபர் 6-ம் தேதிக்கும், இரண்டாவது மனு மீது அக்டோபர் 7-க்கும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான், ஜெய லலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டதாக, புரளிகள் பரவி, நேற்று பெருங்குழப்பம் ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை என்று, அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தெரிவித்த தாகத் தகவல்கள் வெளியாகி, உடனடியாக அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், நிபந்தனைகள் பின்னர் தெரிவிக் கப்படும் என்றும் வதந்திகள் பரவின. பின்னரே, ஜாமீன் கோரிக்கை நிராகரிப்பு என்று தகவல் வெளியானது.