Published : 04 Dec 2014 03:05 PM
Last Updated : 04 Dec 2014 03:05 PM

கூட்டத்தொடரை நீட்டிக்க வலியுறுத்தல்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வருக்கான இருக்கையில் அமரவில்லை. அவர் நிதியமைச்சராக இருந்தபோது அமர்ந்த இடத்திலேயே அமர்ந்தார்.

முதல் நாள் கூட்டத்திலேயே அமளிக்கு பஞ்சமில்லை. அவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு வார காலத்திற்காவது கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

அவையில் இருந்து வெளிநடப்புச் செய்த பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, " தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுப்பதோ அல்லது தமிழக மக்களின் நலன்களுக்காக பாடுபடுவதோ அ.தி.மு.க. அரசின் நோக்கமல்ல. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் சட்டமன்றத்திற்குச் சென்றோம். சட்டமன்றத்திற்குள் விவாதிக்க எங்களை அனுமதிக்கவில்லை. மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க சட்டமன்றக் கூட்டத் தொடரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பேரவைத் தலைவர் பரிசீலிக்கவே மறுத்து விட்டார்.

புனிதமிக்க தமிழக சட்டமன்றத்திற்குள் சிறைத் தண்டனை பெற்ற தங்கள் தலைவரைப் புகழ்வதிலேயே அமைச்சர்களும், முதலமைச்சரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தலைவர் கலைஞர் காலத்தில் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாகத் திகழ்ந்த சட்டமன்றம் இப்போது சிறைத் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை புகழும் மன்றமாக மாறி விட்டது.

நீதித்துறையை சிறுமைப்படுத்தி, சட்டமன்றத்தின் மாண்பினையும், புனிதத்தையும் சிதைத்து, தமிழக மக்களை அவமாரியாதை செய்த அ.தி.மு.க. அரசின் இன்றைய நாள் வெட்கப்பட வேண்டிய நாள்" என்றார்.

தேமுதிக உறுப்பினர் மோகன் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது, "அவையில் அமைச்சர்கள், உறுப்பினர்கள் பேசும்போது ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் நடைபெறும் தமிழக அரசு என குறிப்பிட்டு பேசுகிறார்கள். ஊழல் வழக்கில் குற்றவாளியாக இருக்கும் ஒருவர் வழிநடத்தும், அரசு நமக்குத் தேவையா?" என்றார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கக் கோரி அவையில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையில் அமைதி காக்கும்படி சபாநாயகர் வலியுறுத்தியும் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

முன்னதாக, சட்டப்பேரவைக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி பேரவை குறிப்பில் கையெழுத்திட்டார். சட்டப்பேரவையில், தனக்கென்று தனியாக இருக்கை வசதி ஏற்படுத்தித் தராததால் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x