

காலநிலை மாற்றம் காரணமாக நீலத்தடி நீரின் அளவு குறைந்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, சிக்கிம் ஆகிய மாநில வேளாண் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, உதகையில் இப்பயிற்சி முகாமை, இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவனத் தலைவர் ஓபிஎஸ் கோலா நேற்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் கூறும்போது, “மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில், பாடத் திட்டங்களை இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவனம் வரையறுக்கிறது. இப்பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஒரு மாதம் களப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்மூலமாக மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது.
நீர் பாதுகாப்பு முறைகள், கட்டமைப்புகளை வடிவமைத்தல், மறுசுழற்சி, மழை நீர் சேகரிப்பு, வடிகால், ஓடை பராமரிப்பு, நீர்பரி முகடு மேலாண்மை, புவியியல் தகவல் மற்றும் செயல் விளக்கம், மண் ஆய்வு செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
கால நிலை மாற்றம் காரணமாக நீலத்தடி நீரின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. குறைந்த நாட்களில் அதிகப்படியான மழை பெய்கிறது. இத்தகைய சவால்களை எதிர்கொள்ள, வேளாண் பொறியாளர்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்” என்றார்.