

திருச்சி பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள மாடு வதைக் கூடத்தை மூடுவதற்கு மாட்டிறைச்சி வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மாநகராட்சி உதவி ஆணையரை நேற்று சிறைபிடித்தனர்.
இறைச்சிக்காக மாடுகள் விற்பதை தடை செய்து மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில், திருச்சி பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள மாடு வதைக் கூடத்தை மூடுவதற்காக மாநகராட்சி உதவி ஆணையர் வைத்தியநாதன், உதவிச் செயற்பொறியாளர் பக்ருதீன் ஆகியோரும் நேற்று காலை வந்தனர்.
இதற்கு அங்கிருந்த மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சுமார் 50 பேர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மாடு வதைக் கூடம் மூடப்பட்டால் இந்தத் தொழிலை நம்பியுள்ள தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று கூறி, மாநகராட்சி அதிகாரிகளை சிறைபிடித்ததுடன், அவர்கள் வந்த வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாடு வதைக் கூடத்தின் பிரதான நுழைவு வாயில் கதவையும் பூட்டினர்.
தகவலறிந்து போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்து, உதவி ஆணையரை மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் பேசி அதன்பிறகு தொடர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து, மாடு வதை கூடத்துக்கு சீல் வைக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்