

ஆனைமலை புலிகள் காப்பகத் தில் முதல்முறையாக அக இணையம் எனப்படும் ‘இன்ட்ராநெட்’ மூலம் வனத்தை நேரலையில் கண்காணிக்கும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. படிப்படியாக இத்திட்டம் அனைத்து புலிகள் காப்ப கங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கியது ஆனைமலை புலிகள் காப்பகம். 958 சதுர கி.மீ. வனப்பகுதியையும், அதில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனச்சரகங்களும் உள்ளன. 2008-ல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி, காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு வன உயிரினப் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் யானை, புலி, சிறுத்தை, வரையாடு உள்ளிட்ட அரிய விலங்கினங்கள் அதிகமாக உள்ளன. மேலும் 2010-ல் 13 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2015-ல் 23-க்கும் அதிகமாக உயர்ந்தது. இதனால் சிறப்பாக செயல்படும் புலிகள் காப்பகம் என்ற விருதை ஆனைமலை புலிகள் காப்பகம் பெற்றது.
வனச்சூழல் கண்காணிப்பையும், வேட்டைத் தடுப்பையும் பலப்படுத் தும் முயற்சியாக அகஇணையம் எனும் இன்ட்ராநெட் நேரலைக் கண்காணிப்பு முறையை
ஆனைமலை புலிகள் காப்பகத்
தில் வனத்துறை அறிமுகப்படுத் தியுள்ளது. முதல்கட்டமாக உடுமலை வனச்சரகத்தில் 2 இடங் களில் அதிநவீன கேமராக்களைப் பொருத்தி வனத்தின் நேரலைக் காட்சிகளைப் பதிவு செய்து வருகின்றனர். நேரலையாக ஒளிபரப்பாவதால், வனப்பகுதியில் நிலவும் சூழல்களை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
5 கி.மீ.க்கு பார்க்க முடியும்
வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உயிர்ச்சூழலைக் காக்க தொழில்நுட்ப வசதிகள் தேவை. வழக்கமான கேமராக்கள் மூலம், வனத்துக்குள் பதிவாகும் சம்பவங்களை 4 நாள் கழித்தே பார்க்க முடியும். ஆனால் புதிய வகை கேமராக்கள், நேரலையாக வனப்பகுதியை காட்டும். ஜிபிஎஸ் உதவியுடன், இன்ட்ராநெட் மூலம் இயங்குவதால் துறை ரீதியாக மட்டுமே இயக்க முடியும். நேரலையாக காட்சிகள் கிடைப்பதால், வனவிலங்குகள் இறந்து கிடப்பது, மர்ம நபர்கள் நுழைவது, தீ விபத்துகள் உள்ளிட்டவற்றை உடனடியாக கண்காணித்து, அருகாமையிலுள்ள வனத்துறை முகாமுக்கு தகவல் கொடுக்க முடியும். தேசிய புலிகள் காப்பக ஆணையம் வழங்கி உள்ள நிதியில் உடுமலை சரகத்தில் உள்ள அமராவதி அணை, வசூல்பாறை ஆகிய நீர்பிடிப்புப் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வகை கேமராக்கள் 360 டிகிரி கோணத்துக்கு சுழலக்கூடியவை. கண்காணிப்பு அறையில் இருந்து கேமரா கோணத்தை மாற்றி, கேமராவில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சிறு உயிரினத்தையும்கூட தெளிவாக நெருங்கிப் பார்க்க முடியும். அதேபோல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் புகைப்படத் தையும் இந்த கேமரா மூலம் பதிவு செய்ய முடியும். அந்த அளவுக்கு தெளிவான பதிவு கிடைக்கும்.
உத்தரகாண்டில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவில் இதுபோன்ற கண்காணிப்பு உள்ளது. அதற்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் செம்மரக் கடத்தலைத் தடுக்க இந்த நேரலை கண்காணிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் புலிகள் காப்பகம் ஒன்றில் இந்த வசதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு கொண்டு செல்ல வும் புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஆலோசித்து வருகிறது.
திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, பொள்ளாச்சி உள்ளிட்ட இதர பகுதிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என்றார்.வன ஊழியர்கள் கூறும்போது, ‘கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப் படும் கேமராக்கள் மூலமே விலங்குகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்த வகை நேரலைக் கண்காணிப்பில், துல்லியமான வீடியோ பதிவுகள் உடனடியாக நமக்கு கிடைத்து விடுகின்றன. சமீபத்தில், உடுமலை அருகே யானைகள் கூட்டம் ஒன்று நீர்நிலையில் இறங்கி குளித்துக் கொண்டிருப்பது நேரலையில் பதிவானது. டிஸ்கவரி சேனல்களில் ஒளிபரப்பாவதைப் போன்ற துல்லியமான பதிவாக இருந்தது. அதேபோல, கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படுவதை அறிந்து, வனத்துக்குள் அத்துமீறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது’ என்றனர்.
முகாம்களில் கண்காணிப்பு
வனக் கண்காணிப்பு மட்டுமில்லாமல், வனத்தில் உள்ள வேட்டைத்தடுப்பு முகாம்களைக் கண்காணிக்கவும் நவீன ரக கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக வன அதிகாரிகள் கூறுகின்றனர். வேட்டைத்தடுப்பு முகாமில் ஊழியர்கள் சரியாக பணியாற்றினால், வனக் குற்றங்களைத் தடுக்க முடியும். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 36 முகாம்களிலும், நவீன கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தொலைபேசியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கேமரா மூலம் அதிகாரிகள் முகாமைக் கண்காணிக்க முடியும். முகாமில் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து, வேலைகளைப் பகிர்ந்தளிக்க முடியும். முழுமையாக ஜிபிஎஸ் உதவியுடன் செயல்படும் இத்திட்டமும் 3 இடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.