

நாட்டில் ரவுடிகள், தகுதியற்ற வர்கள் அரசியல் கட்சிகள் தொடங்குவதைத் தடுக்க, குறைந்த பட்சம் 10 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கடும் நிபந்தனை களை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் யோசனை தெரி வித்துள்ளது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பாலகிருஷ்ணன் என்பவரை போட்டியிடவிடாமல் தடுத்து, லஞ்சம் வழங்க முயன்ற தாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தர விடக்கோரி தேசிய மக்கள் சக்தியின் மாநில அமைப்புச் செயலர் எம்.கருணாகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, மனுதார ரின் தேசிய மக்கள் சக்தி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் சில ஆவ ணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது, யார் வேண்டு மானாலும் கட்சி தொடங்கும் நிலை உள்ளது. ரவுடிகளும் கட்சி தொடங்குகின்றனர். கட்சிகளைத் தொடங்கி அதிகாரிகளை மிரட்டு கின்றனர். கொடியை கட்டிக் கொண்டு காரில் வருவர். அவர் களுக்கு போலீஸார் சல்யூட் அடிப்பார்கள். இந்த செயலை அனு மதிக்க முடியாது. புற்றீசல்போல் கட்சிகள் வருவதை தடுக்க கடும் நிபந்தனைகளை விதிக்க வேண்டும். கட்சி தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்றார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டின் வாதிடுகையில், தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகள் பெற்றால் மட்டுமே கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும் என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, புதிய கட்சிகள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து அக். 28ல் பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.