

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர்(58) அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய நிலையில், ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரர். அரசுப் போக்குவரத்துக் கழக கும்ப கோணம் கோட்டத்தில் உதவி மேலாளராக பணியில் சேர்ந்த இவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேம்பாட்டு வளர்ச்சி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சென்னையில் பணியாற்றி வந்தார்.
கடந்த மார்ச் 31-ம் தேதி சுந்தர் ஓய்வுபெற வேண்டும். ஒருவர் பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றினாலும் ஓய்வு பெறுவ தற்கு முதல்நாள், பணிக்குச் சேர்ந்த கோட்டத்துக்கு வரவேண்டும் என்பது போக்குவரத்துக் கழகத்தின் விதிமுறை. அதன்படி, சென்னையிலிருந்து கடந்த 30-ம் தேதி அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு சுந்தர் பணிக்கு வந்தார்.
ஆனால், சுந்தரை ஓய்வுபெற அனுமதிக்காமல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை செயலாளர் சந்திரகாந்தா காம்லே, கடந்த 31-ம் தேதி உத்தரவிட்டுள்ளார். இதனால், சுந்தருக்கு பணி ஓய்வுக்குப் பிறகு வழங்க வேண்டிய அனைத்துப் பலன்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் கே.என்.நேரு போக்கு வரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, கும்பகோணம் கோட்டத்தில் துணை மேலாளர் (கணக்கு) பதவியில் சுந்தர் பணியாற்றினார். அப்போது ஊழல் முறைகேடு நடைபெற்றதாக சுந்தர் உட்பட 17 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகள் தற் போது நிலுவையில் உள்ளன. இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.