

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கிய வன்முறையாளர்களை உடனடியாகக் கைதுசெய்து அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கோவை நகரில் காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது அரசு கடும் நடவடிக்கை வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கோவை மாநகரம் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். அங்கே மதக் கலவரங்கள் ஏற்பட்டபோதெல்லாம் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்குப் பாடுபட்ட இயக்கங்களில் முதன்மையானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சியின் அலுவலகத்தின்மீது நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் தமிழ்நாட்டில் வகுப்புவாதிகள் எந்த அளவுக்குத் துணிச்சல் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
சில நாட்களுக்கு முன்புதான் கன்னியாகுமரி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. அக்கட்சியின் கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன. இப்போது கோவையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் திட்டமிட்ட சதியைச் சிலர் அரங்கேற்றுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தமிழக அரசு இதில் மெத்தனமாக இருக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு வகுப்புவாதிகள் இங்கே காலூன்ற முயற்சிக்கிறார்கள். அதற்கு வன்முறையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பிற மாநிலங்களைப் போல தமிழ்நாடும் வகுப்புவாத வன்முறையின் களமாக மாற்றப்படவேண்டும் என்பதே அவர்களது நோக்கம். இதற்குத் தமிழக அரசு இடம் தந்துவிடக் கூடாது.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கிய வன்முறையாளர்களை உடனடியாகக் கைதுசெய்து அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும், தமிழக அரசு மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.