

அரசு போக்குவரத்துக் கழகம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சுமார் 2 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசாக ரூ.11.50 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு, இவற்றில் சிறப்பாக பணிபுரியும் பணியா ளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2013ம் ஆண்டில் 91 முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு 85 ரூபாயும், 151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு 195 ரூபாயும், 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு 625 ரூபாயும் பொங்கல் பரிசாக 'சாதனை ஊக்கத் தொகை' என வழங்கப்படும்.
இதன்மூலம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 332 பணியாளர்களுக்கு 7 கோடியே 42 லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் 'ஏ'மற்றும் 'பி' தொகுப்பு அலுவலர்களுக்கு 1,000 ரூபாயும், தீபாவளி போனஸ் பெற்ற 'சி' மற்றும் 'டி'தொகுப்பு பணியாளர்களுக்கு 350 ரூபாயும் செயலாக்க ஊக்கத் தொகையாக வழங்கப்படும். மொத்தம் 38,899 பணியாளர்களுக்கு 1 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரத்து 260 ரூபாய் வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத் தியாளர்கள் ஒன்றியங்கள், பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களில், 2013-ம் ஆண்டில் 90 நாள் மற்றும் அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு 145 ரூபாயும், 91 முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு 240 ரூபாயும், 151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு 400 ரூபாயும், 200 நாட்களுக்கு மேல் பணியாற்றிய பணியாளர் களுக்கு 1,000 ரூபாயும் பொங்கல் பரிசாக 'உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை' வழங்கப்படும்.
மொத்தத்தில் 1,95,844 பணியாளர் களுக்கு 11 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரத்து 260 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.