Published : 24 Oct 2014 09:55 AM
Last Updated : 24 Oct 2014 09:55 AM

மின் கட்டண உயர்வு: கருத்து கேட்பு கூட்டம் இன்று தொடக்கம்

மின் கட்டண உயர்வு குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது. இதில் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் முன்னிலையில், பொதுமக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

தமிழக மின் வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன் வந்து மேற்கொண்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 23ம் தேதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த கட்டண விவரங்கள் குறித்த தங்களது கருத்துக்களை பொதுமக்கள், தொழிற்துறை மற்றும் வணிகத் துறையினர் வரும் அக்டோபர் 31க்குள் அனுப்புமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மின் கட்டணம் குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னையில் பாரிமுனையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடக்கிறது. காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அக்‌ஷய்குமார், உறுப்பினர்கள் நாகல்சாமி, ராஜகோபால், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ஞானதேசிகன் மற்றும் மின்வாரிய இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழிற் துறையினர், நுகர்வோர் நல சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தங்கள் பெயரைப் பதிவு செய்து விட்டு, மின் வாரிய மனுவின் மீதும், மின் வாரிய செயல்பாடுகள் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

கடந்த முறை கருத்துக் கேட்புக் கூட்டத்தின் போது, பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால், இம்முறை பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க கூட்டம் நடைபெறும் அரங்கின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும் மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாவது கருத்து கேட்பு கூட்டம் வரும் 28ம் தேதி ஈரோட்டிலும், மூன்றாவது கூட்டம் அக்டோபர் 31ல் திருநெல்வேலியிலும் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x