Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM

சென்னை கொசுத் தொல்லை: ஸ்டாலின் மீது மேயர் குற்றச்சாட்டு

சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்ததற்கு முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று மேயர் சைதை துரைசாமி குற்றம்சாட்டினார்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலை வகித்தார். கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினர் டி.சுபாஷ் சந்திரபோஸ், பத்திரிகை செய்தி ஒன்றைக் காட்டி பேச முயன்றார். அதற்கு மேயர் அனுமதி மறுத்ததால் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் அவைக்குள் வந்தனர்.

அப்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மேயர் பேசியதாவது:

சென்னையில் கொசுத் தொல்லை மாநகராட்சிக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். திமுக ஆட்சிக் காலத்தில், அதாவது 2007-ம் ஆண்டு சுகாதாரத் துறையிலிருந்து அளிக்கப்பட்ட அறிக்கையில், சென்னையில் மழைநீர் கால்வாய்களில் 900 கி.மீ. தூரத்துக்கு கழிவு நீர் கலந்து ஓடுகிறது என்றும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து 1,65,000 கழிவு நீர் இணைப்புகள் முறைகேடாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதை சரிசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறைக்கப்பட்ட அறிக்கை

ஆனால், கடந்த ஆட்சியில் இது பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அறிக்கை, கடந்த மாதம்தான் என் கைக்கு வந்தது. கொசுத் தொல்லையை ஒழிக்க பல நடவடிக்கைகள் எடுத்த பிறகும்,ஏன் ஒழியவில்லை என்று ஆய்வு செய்தபோதுதான் கடந்த காலத்தில் நடந்த நிர்வாகச் சீர்கேடு தெரியவந்தது. கழிவறை கழிவு, மழைநீர் கால்வாயில் கலப்பது அவலம். இந்த அவலத்தையும் கடந்த ஆட்சியில்தான் செய்து உள்ளனர்.

மழைநீர் கால்வாயில் முறை கேடாக இணைக்கப்பட்ட கழிவுநீர் இணைப்புகளைத் துண்டித்து வருகிறோம். இது வரை 400 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. மழைநீர் கால்வாயைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் காலத்தில் வெறும் 10 சதவீத பணிகள்தான் நடந்திருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 80 சதவீத பணிகளை முடித்துள்ளோம்.

சமீபத்தில் சென்னையில் ஒரு மணி நேரத்தில் 13 செ.மீ மழை பெய்தது. ஆனால், நாங்கள் மேற்கொண்ட மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக 114 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது. அடுத்த மழைக்கு அங்கேயும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதையும் மீறி மழைநீர் தேங்கினால் அது தனியாருக்குச் சொந்தமான இடமாக இருக்கும்.

மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்திருக்க முடி யும். ஆனால், அவர் அதைச் செய்ய வில்லை.

என்னை கசாய வியாபாரி என்கிறார்கள். மக்கள் நலன் காக்கும் கசாய வியாபாரிதான். ஆனால், நான் கமிஷன் வியாபாரி இல்லை. மக்கள் பசிப்பிணியைப் போக்கவே இட்லியும், சாம்பார் சாதமும் தருகிறோம்.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார். மேயரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று பேசினர். ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் பதிலுக்கு பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x