

தமிழகத்தில் 1,500 அரசு விரைவு பேருந்துகளில் தத்கால் டிக்கெட் முன்பதிவு முறை தீபாவளிக்குள் தொடங்கவுள்ளது.
ரயில்வேத் துறையில் இருப்பது போல், தமிழகத்தில் நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகளில் தலா 4 இருக்கைகளுக்கு தத்கால் டிக்கெட் முன்பதிவு முறை கொண்டு வரப்பட உள்ளது. வரும் தீபாவளி பண்டிக்கைக்குள் இந்த வசதி தொடங்கவுள்ளதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழகங்களின் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 300 கிலோ மீட்ட ருக்கு மேல் அதிக தூரம் செல்வதற் காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்படு கின்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், பெங்களூர், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுமார் 1,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட சொகுசு பேருந்துகளில் தலா 4 இருக்கைககளுக்கு தத்கால் டிக்கெட் முன்பதிவு முறை தொடங்கப்படும்.
ரயில்வே துறையில் இருப்பது போல் 24 மணிநேரத்துக்கு முன்பு தத்கால் முன்பதிவு தொடங்கும். இந்த முறையில் டிக்கெட் வாங்கு பவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான்கார்டு, ஒட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள், பள்ளி, கல்லூரி அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ்புக் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண் பிக்க வேண்டும். டிக்கெட் முன் பதிவு செய்ததும், அதற்கான குறுந் தகவல் பயணிகளின் செல்போ னுக்கு வந்துவிடும். தத்கால் டிக் கெட் முன்பதிவுக்கான கட்டண விப ரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யும் வகை யில் செல்போன் செயலி வசதியை யும் அறிமுகப்படுத்தவுள்ளோம். வரும் தீபாவளி பண்டிக்கைக்குள் இந்த புதிய வசதியை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தின் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, ‘‘அரசு விரைவு பேருந்துகளில் தத்கால் டிக்கெட் முன்பதிவு முறை தேவைதான். அதேநேரத்தில் வெளியூருக்கு இயக்கப்படும் பெரும்பாலான விரைவு பேருந்துகளில் போதிய அளவில் பராமரிப்பு இல்லை. சில வழித்தடங்களில் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, முதல் கட்டமாக நீண்ட தூரத்துக்கு செல்லும் விரைவு பேருந்துகளை பழுதுபார்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண் டும். மேலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் பழைய பேருந்துகளை நீக்க வேண்டும்’’ என்றார்.