

தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறு வனம் உருவாக்கியுள்ள கேபிள் டிவி சந்தா தொகை செலுத்து வதற்கான கைபேசி செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிமுகப்படுத்தினார்.
இந்த செயலியை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய மாத சந்தா ரூ.70-ஐ சந்தாதாரர்கள், தங்கள் கைபேசி மூலமே நேரடியாக செலுத்தலாம். இதில் ரூ.20 தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன கணக்கிலும், மீதமுள்ள ரூ.50 கேபிள் ஆபரேட்டர்கள் கணக்கிலும் வரவு வைக்கப்படும். சந்தாதாரர்கள் இந்த செயலியை பயன்படுத்தி மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சந்தா தொகையை செலுத்தலாம். சந்தா தொகை செலுத்தியவர்களுக்கு தொகை பெறப்பட்டதற்கான குறுஞ் செய்தி அனுப்பப்படும். கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சந்தாதாரர் களிடம் விவரம் கோரினால் குறுஞ் செய்தியை அவர்களிடம் காட்டலாம். 10-ம் தேதிக்கு மேல் செலுத்த விரும்புவோர் கேபிள் டிவி ஆபரேட்டரிடம் செலுத்த வேண்டும்.
இச்செயலி ஆண்ட்ராய்டில் இயங்கும் கைபேசியில் செயல் படும். இந்த செயலியை பொது மக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டை உள்ள சந்தாதாரர்கள், ஆதார் அட்டை ‘க்யூ ஆர்’ கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன்பின் தெரியும் விவரங்கள் சரியாக இருந் தால், கைபேசிக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) எண் அனுப்பப்படும். அந்த எண்ணை பதிவு செய்து உறுதி செய்தால், சுய விவரங்கள் பதிவு செய்யப்படும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல், பாலினம் ஆகிய விவரங்களை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
பதிவு முடிந்த பின் கேபிள் டிவி ஆபரேட்டரை தெரிவு செய்வதற்கான பகுதியில் சந்தாதாரர்கள் தங்களின் ஆபரேட்டரை தேர்வு செய்ய வேண்டும். சந்தாதாரர்களின் விவரங்கள் கேபிள் டிவி நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்ட பின், அவர்களுக்கு கைபேசி மூலம் சந்தா தொகை செலுத்தலாம் என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும், அதன் பின் சந்தா தொகை செலுத்தலாம்.
கைபேசி செயலி தொடக்க விழாவில், தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் எம்.மணிகண்டன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் தா.கி.ராமச்சந்திரன், கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.