

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியி்ட்ட சைதை துரைசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டனர் என்றும், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர் கூறுவதை ஏற்கக்கூடாது என்றும், தனது தேர்தல் செலவு கணக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி நேற்று நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு ஆஜராகி, கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் மு.க.ஸ்டாலின் செலவு செய்த தேர்தல் கணக்கு விவரங்களை தாக்கல் செய்தார். அவரிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக வழக்கை ஜன.23-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.