மாற்று சக்தி முயற்சிக்கு பாஜக புதிய வியூகம்: தமிழகம் வருகிறார் அமித் ஷா

மாற்று சக்தி முயற்சிக்கு பாஜக புதிய வியூகம்: தமிழகம் வருகிறார் அமித் ஷா
Updated on
2 min read

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு மாற்று சக்தியாக உருவெடுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதையொட்டிய வியூகங்களின் ஒரு பகுதியாக, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா விரைவில் தமிழகம் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த 50 ஆண்டு காலமாக, தமிழக அரசியலும் ஆட்சி - அதிகாரத்திலும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கும் சூழலில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் பார்வை இப்போது தமிழகம் பக்கம் திரும்பியிருக்கிறது.

கட்சியைப் பலப்படுத்தும் நோக்கிலான அமித் ஷாவின் தமிழகப் பயணம் தொடர்பான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை மேம்படுத்தும் பணிகளை அவர் தொடங்கிவிட்டாராம். குறிப்பாக, தலித் மக்களின் வாக்குகளை மையப்படுத்தி அவர் வியூகம் வகுத்து வருவதாக தெரிகிறது.

இது தொடர்பாக, பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், "எங்கள் தேசிய தலைவர் (அமித் ஷா) விரைவில் தமிழகம் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஆதி திராவிட மக்கள் மீது கவனம் செலுத்துவதை அவரது பயணத்தில் முக்கிய அம்சமாக இருக்கும்" என்றார்.

தமிழகத்தின் கிராமப்புறப் பகுதிகளுக்கு அவர் செல்வாரா என்று கேட்டதற்கு, "அவரது தமிழகப் பயணம் என்பது வெறுமனே தலைநகரம் செல்வது மட்டுமில்லை" என்றார்

மேலும் அவர் கூறும்போது, "இதேபோன்ற பயணத்திட்டத்தை வழக்கமாக முடிவு செய்துள்ளோம். அதன்மூலம், தமிழகத்தில் ஒரு மாற்று இருப்பதை மக்கள் மனதில் பதியச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது, இம்மாநிலத்துக்கு இப்போதைய அவசியத் தேவை.

தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் காணத் தொடங்கிவிட்டோம்" என்று முரளிதர ராவ் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளை ஏ பிளஸ், ஏ மற்றும் பி என மூன்று வகையில் பிரித்து, அதன் அடிப்படையில் வியூகங்களை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வாங்கி இருப்பதால் இவை ஏ பிளஸ் தொகுதிகள் என்றும், மற்ற மாவட்டங்களில் ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக பாஜக கூறுகிறது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மட்டுமின்றி, மத்திய அமைச்சர்களும் அவ்வப்போது தமிழகம் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு தொகுதியிலும் 5,000 துடிப்பான உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மூலம் கட்சிகளை வலுப்படுத்தும் திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாம்.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத் தேர்தல் களத்தை பாஜக எதிர்கொண்டது. போட்டியிட்ட 7 தொகுதிகளில் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுக ஏற்கனவே விலகிவிட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து மோடி அரசை விமர்சிப்பதில் பாமக தலைவர் ராமதாஸ் முதன்மை வகிப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மாற்று அணியை அறிவித்துக்கொண்ட பாமக, அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில்தான், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகத்தை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் பாஜக தீவிரமாக வகுத்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in