Published : 27 Sep 2016 10:54 AM
Last Updated : 27 Sep 2016 10:54 AM

உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத கர்நாடக அரசை கலைக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கருத்து

காவிரி நதிநீர் பிரச்சினையில் தங்களது உத்தரவை நிறைவேற்றாத கர்நாடக அரசை கலைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு பிடிவாதம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக நீண்டகாலம் பதவி வகித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ‘தி இந்து’ மையத்துக்கு அளித்த பேட்டி:

காவிரி பிரச்சினை, தமிழகம் - கர்நாடகம் இடையே உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகி இருக்கிறது. தங்கள் அனுபவத்தில் இந்தப் பிரச்சினையை கையாண்ட விதம் பற்றி கூறுங்கள்?

கடந்த1967-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபோதுதான் காவிரி பிரச்சினை தொடங்கியது. அப்போது அண்ணா முதல்வராக இருந்தார். பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி பொறுப்பு வகித்தார். அந்த நேரத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்தது. அதில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது.

அன்றைக்கு கர்நாடக முதல்வராக இருந்த வீரேந்திர பாட்டீல், பொதுப்பணித் துறையின் பொறுப்பையும் வகித்ததால் அவருக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். அதையடுத்து இருவரும் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. அதற்கு முன்புவரை, காவிரி பிரச்சினை பற்றி யாருக்கும் பெரிதாக தெரியாது.

வீரேந்திர பாட்டில் பெருந்தன்மையோடு நடந்துகொண்டதால் காவிரியில் தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போதுகூட இரு மாநிலத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. கருணாநிதி தமிழக முதல்வரான பிறகு கர்நாடக அரசுக்கு பல கடிதங்கள் எழுதினார். அதைப் பொருட்படுத்தாமல் அணைகளை கர்நாடக அரசு கட்டியது. காவிரி நடுவர் மன்றம் அமைப்பதே இப்பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் என்று மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். அதுவே சட்டப்பேரவையில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

தொடக்கத்தில் விவசாயிகள் பிரச்சினையாக இருந்த காவிரி பிரச்சினை, இரு மாநிலங்களுக்கு இடையே நீயா, நானா என்று ஆதிக்கம் செலுத்தும் பிரச்சினையாக எப்போது மாறியது?

தொடக்கத்தில் எந்தப் போராட்டமும் நடத்தப்படவில்லை. தமிழகத்துக்கு 205 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த பிறகுதான் போராட்டம் வெடித்தது. இப்போது இரு மாநிலத்திலும் அரசியல் பிரச்சினையாகிவிட்டது.

இப்பிரச்சினை எப்போது அரசியலாக மாறியது?

ஆரம்பத்தில் இப்பிரச்சினை குறித்து இரு மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் விவசாயிகள் கலந்துகொண்டனர். அதில் பலன் இல்லாததால், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவையும் நடுவர் மன்ற உத்தரவையும் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில்தான் முதல் போராட்டம் நடந்தது. இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. அதனால் அந்த அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி கர்நாடக அரசை கலைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும். அடுத்து நடக்கும் தேர்தலில் கலைக்கப்பட்ட அரசுக்கே மக்கள் ஆதரவாக இருந்து, அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதன்பிறகு இப்பிரச்சினை அரசியலமைப்பு சட்டப் பிரச்சினையாக மாறும்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x