

பணியிலிருக்கும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், ''தமிழக மக்களின் வரிப்பணத்தின் மூலமாக, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளதை விட கூடுதலான அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக மருத்துவ முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான இடங்களும் தமிழகத்தில் கூடுதலாக உள்ளன.
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணிபுரிய மருத்துவர்களை ஊக்குவிக்கும் முறையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு நிரப்பும் இடங்களில் 50 சதவிகிதம் பணியிலிருக்கும் மருத்துவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டு வந்தது.
தகுதிகாண் தேர்வில் சிறப்பு இடஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர் அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் முன்னுரிமை பெற்று வந்தனர். இப்போது நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக பணியிலிருந்து கொண்டு சிறப்பு மருத்துவம் பயில்வோருக்கான வாய்ப்புகள் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் கிடைக்காத சூழல் ஏற்படுவதோடு இதுகாறும் இந்த நோக்கத்திற்காக கிராமப்புறத்தில் மருத்துவசேவையில் ஈடுபட்டோரின் வாய்ப்புகளும் மறுக்கப்படும்.
எனவே, தமிழக அரசின் நிதிஒதுக்கீட்டின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுகாறும் நடைமுறையில் உள்ளபடி முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பில் மாநில அரசின் கலந்தாய்வின் மூலம் ஒதுக்கப்பட்டு வந்த சிறப்பு இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்தும் முறையிலும், நீதிமன்றத்தின் மேற்படி ஆணையை மறுபரிசீலனை செய்வதற்கு சட்டப்படியும், நீதிமன்றத்தின் மூலமும் வழிவகை செய்ய மாநில அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.