

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் பி.ஏ.ஜோசப், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி. தினகரன் போட்டியிடுகிறார். அந்நிய செலாவணி மோசடி வழக்கில், அவருக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை சரியானதுதான் என உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் இருந்து டிடிவி. தினகரனை விடுவித்து, எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஒரு குற்ற வழக்கில், ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டாலே அவரும் குற்றவாளிதான். எனவே அவரது வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
அதுபோல சுங்கத்துறை சட்டம்-1962 மற்றும் அந்நிய செலாவணி வரன்முறைச் சட்டம் 1973-ன்படி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. இந்த இரு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தால் அவையும் குற்றவியல் தண்டனைக்கு இணையானவையே. ஆகையால், இந்த சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் அபராதத்தையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஷரத்திற்குள் கொண்டு வந்து, அபராதம் விதிக்கப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
எனவே ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டு சிறை தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியாது என உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகள் 8(1) (சி) மற்றும் பிரிவு 8(1)(இ) ஆகியவை சட்ட விரோதமானவை. அரசிய லமைப்பு சட்டத்துக்கு எதிரானவை என அறிவிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி(பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
நீதிமன்றம் தலையிட முடியாது
அப்போது நீதிபதிகள், ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவுகள் தொடர்பாக கேள்வி எழுப்பும் இந்த வழக்கில் மனுதாரர் உரிய அமைப்பை அணுகிதான் பரிகாரம் தேட முடியும். இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” எனக்கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.