

மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்கள் சென்னை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தானாக முன்வந்து மேற்கொள்ளும் (சூ மோட்டோ) நடவடிக்கையின் பேரில், மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை, கடந்த செப்டம்பர் 23-ம் தேதி வெளியிட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை கடிதம் மூலம் அக்டோபர் 23-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய 3 இடங்களில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார். 24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்திலும், 28-ம் தேதி, நெல்லை வண்ணாரப்பேட்டை செயின்ட் சேவியர்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் 31-ம் தேதி ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள மல்லிகை அரங்கத்திலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய நான்கு இடங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடந்தன. இம்முறை 3 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளன.