Last Updated : 30 Mar, 2017 10:37 AM

 

Published : 30 Mar 2017 10:37 AM
Last Updated : 30 Mar 2017 10:37 AM

மாநில நெடுஞ்சாலைகளிலும் ‘டோல்கேட்’ திட்டம்?

உலக வங்கியின் நிபந்தனைக்கு உட்பட்டு மாநில நெடுஞ்சாலை களின் பராமரிப்பை தனியாருக்கு ஒப்படைப்பதாகவும், தேவையற்ற பணியிடங்களை நீக்குவதாகவும் கூறி தமிழகத்தில் 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் 2002-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். 41 மாத போராட்டத்துக்குப் பிறகு, அவர்கள் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். வேலை இழப்புக்கு எதிரான போராட்டம் என்பதைவிட, தனியார் மயத்துக்கு எதிரான போராட்ட மாகவே இது கருதப்பட்டது.

அதன்பிறகு மாநில நெடுஞ் சாலைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக தனியார் மயமாக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசம் ஒப்படைத்து, சுங்கச் சாவடிகளை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தனியார்மயமாக்கல் திட்டத்தால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி வீணாக்கப்படு வதாகவும் நெடுஞ்சாலை சாலைப் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.அம்சராஜ் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

2010-ல் இருந்து மாநில நெடுஞ் சாலைகளை தனியார்மயமாக்கும் வேலைகள் அதிகமாகிவிட்டன. அதன் ஒருபகுதியாக, பொள்ளாச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி கோட்டங்களில் ரூ.1300 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டு களுக்கு சாலைப் பராமரிப்புப் பணி கள் தனியார்வசம் வழங்கப்பட்டுள் ளன. இந்தப் பணியை அரசே ஏற்று நடத்தினால் ஒட்டுமொத்தமாக ரூ.1000 கோடி வரை மிச்சப்படுத்த முடியும். அரசு நிதியின் பெரும் பகுதி பாதுகாக்கப்படும், வேலைவாய்ப்பு பெருகும்.

உதாரணமாக, பொள்ளாச்சி கோட்டத்தில் 372 கிலோ மீட்டர் சாலையில், ஒவ்வொரு 8 கிலோ மீட்டருக்கும் பராமரிப்புக்காக தலா 2 பணியாளர்களை நியமித்தால் ஒட்டுமொத்தமாக 48 பணியாளர்கள் போதும். அவர்களுக்கான 5 வருடத்துக்கான ஊதியம் ரூ.7 கோடி. இடுபொருட்கள் செலவு அதிகபட்சம் ரூ.90 கோடி என்றாலும், ஒரு கோட்டத்துக்கான சாலைப் பராமரிப்புச் செலவு ரூ.100 கோடியைத் தாண்டாது.

ஆனால், இதே பொள்ளாச்சி கோட்ட சாலைப் பராமரிப்புக்காக தனியார் நிறுவனத்துக்கு ரூ.237 கோடியை அரசு வழங்கியுள்ளது. ரூ.100 கோடி செலவு போக, சுமார் ரூ.130 கோடி வரை நிதி வீணாக்கப்படுகிறது. இதேபோல, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரியிலும் தனியாருக்கு ரூ.800 கோடி வரை லாபம் ஏற்படுத்தும் வகையில் சாலைப் பராமரிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கியச் சாலைகள் என ஒட்டுமொத்தமாக சுமார் 68 ஆயிரம் கி.மீட்டர் சாலை உள்ளது. அதில் திருவள்ளூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி கோட்டங்களில் சுமார் 1000 கிலோ மீட்டர் சாலை தனியார்வசம் சென்றுவிட்டது. அடுத்ததாக விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கோட்டங்கள் தனியார் வசம் கொடுக்கப்பட உள்ளன.

சுங்கச் சாவடிகள்

தேசிய நெடுஞ்சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுங்கச்சாவடிகள் வைத்து கட்டண வசூல் செய்வதைப் போல, மாநில நெடுஞ்சாலை களிலும் சுங்கச்சாவடி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைகளை 10 ஆயி ரம் கிலோ மீட்டருக்கு இணைத்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் என்ற பெயரில் அதில் சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலிக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அண்டை மாநிலங்களுக்குச் சென்று தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். விரைவில் மாநில நெடுஞ்சாலைகளிலும் ‘டோல்கேட்’ அமைக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

பொள்ளாச்சி கோட்ட நெடுஞ் சாலைத்துறையினரிடம் கேட்ட போது, ‘பொள்ளாச்சி உள்ளிட்ட 4 கோட்டங்கள் சாலைப் பராமரிப் பும் ஏற்கெனவே தனியார் நிறு வனங்களின் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அடுத்ததாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படுமா என்பது தெரியவில்லை. அதேபோல சுங்கச் சாவடி அமைப்பது உள்ளிட்டவை அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டவை’ என்றனர்.

பொள்ளாச்சி உள்ளிட்ட 4 கோட்டங்கள் சாலைப் பராமரிப்பும் ஏற்கெனவே தனியார் நிறுவனங்களின் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அடுத்ததாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படுமா என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x