

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பொறியியல் பட்டதாரி ஒருவரும், கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவால் ஒருவரும் உயிரிழந்தனர். 90 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் அருகே எம்.புதூரில் உள்ள கண்டி கருப்பர் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக் கட்டு நடை பெற்றது. முன்னதாக இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், இருசக்கர வாகனங்கள், 10 பேருக்கு சிங்கப்பூர் செல்வதற்கான டிக்கெட், சைக்கிள், பீரோ, மடிக்கணினி உள்ளிட்ட 13 வகையான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஏராளமானோர் ஜல்லிக்கட்டை காண ஆவலுடன் வந்திருந்தனர். கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது போன்று கேலரி அமைக்கப் பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஒண்டிராஜ், இணைச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் கிராமத்தினரோடு இணைந்து ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அச்சங்கத்தின் கவுரவ தலைவர் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.
வாடிவாசல் வழியாக 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 1000-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டை பார்க்க வந்திருந்த திருப்பத்தூர் மேலமாகாணத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி திருநாவுக் கரசு(27) மாடு முட்டியதால் உயிரிழந்தார். கடும் வெயில் காரணமாக உடல்நிலை பாதிக் கப்பட்டு காரைக்குடி கழனி வாசலைச் சேர்ந்த பாஸ்கரன்(38) மாரடைப்பால் உயிரிழந்தார்.
திரண்டிருந்த கூட்டத்துக்கு ஏற்ப போதிய வசதிகள் செய்யப்படாததால் தேவகோட்டை சார் ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் மாலை 3 மணியோடு ஜல்லிக்கட்டை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஜல்லிக்கட்டை நிறுத்திய நிர்வாகிகள், பரிசுப் பொருட்களை வழங்காமல் லாரியில் ஏற்றிச் செல்ல முயன்றுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த காளைகளின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பரிசுப் பொருட்களை பறித்துச் சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் 600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.