

திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க விளம்பரபடங்களை வெளியிட திட்டம் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.
சென்னை மாநகர காவல்துறை சேவையை மேம்படுத்துவது குறித்து ஆணையர் டி.கே.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப் போது, அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, காவல் நிலையங்களின் வெளிப் புறம் சிசிடிவி அமைப்பது குறித்து செய்தியாளர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் டி.கே.ராஜேந்திரன், ‘‘ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மாலை 5 மணிமுதல் 6 மணி வரை, காவல் ஆய்வாளரை பொதுமக்கள் சந்திப்பதற்கு வழிவகை செய்யப்படும்.
சிசிடிவி காட்சிகள்
தினமும் வரும் புகார்கள் குறித்து அன்றைய தினமே விசாரிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். ஏற்கெனவே நடைபெற்ற திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களின் சிசிடிவி காட்சிகளை, எச்சரிக்கை விளம்பரங்களாக சித்தரித்து, திரையரங்குகளில் விளம்பரப் படங்களாக வெளியிட திட்டம் இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம், ஒவ்வொரு ஞாயிறு மாலை நேரத்தில் செயல் படுத்தப்படும்” என்றார்.
அப்போது கூடுதல் ஆணையார்கள் அபய் குமார் சிங், சேஷசாய், மற்றும் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.