Published : 03 Jun 2016 06:08 PM
Last Updated : 03 Jun 2016 06:08 PM

கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்க: ராமதாஸ்

கடந்த ஆண்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக வசூலித்த பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 2016-17 ஆம் கல்வியாண்டுக்கான பாட வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், கல்விக் கட்டணக் கொள்ளை குறித்த புகார்களும் மலை போல குவியத் தொடங்கியுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று போற்றும் அளவுக்கு கல்வி ஒரு காலத்தில் ஈடு இணையற்ற உன்னத சேவையாக இருந்து வந்தது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எல்லையில்லா லாபம் தரும் வணிகமாக மாறி விட்டது.

ஒரு மாணவன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் பட்டப்படிப்பு வரை படிக்க முடியுமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், ஒன்றாம் வகுப்பு மட்டும் உள்ள பள்ளிக்கூடத்தைக் கட்டி கல்வி வணிகத்தைத் தொடங்கினால், கல்லூரியைத் தாண்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வரை கட்டும் அளவுக்கு லாபம் ஈட்ட முடியும் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல... அவமானப்பட வேண்டிய வளர்ச்சியாகும்.

கல்வி வணிகமயமானதற்கும், கட்டணக் கொள்ளை தொடர்வதற்கும் இரு திராவிடக் கட்சிகள் தான் காரணமாகும். கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் நோக்குடன் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையான பள்ளிகள் அக்குழு நிர்ணயித்த கட்டணத்தை மதிப்பதில்லை. குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை தனியார் பள்ளிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசூலித்து வருகின்றன. ஆனால், இன்று வரை ஒரு பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில்லை. மாறாக கல்விக் கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடத்தும் பெற்றோர்கள் தான் மிரட்டப் படுகின்றனர்.காரணம், பள்ளி நிர்வாகங்கள் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையாக இருப்பது தான்.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக கடைசியாக அமைக்கப்பட்டக் குழு நீதிபதி சிங்கார வேலு தலைமையிலான குழு தான். அக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்து விட்டது. அக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கான கட்டண விகிதமும் காலாவதியாகிவிட்டது. இதுபோன்ற சூழல்களில் கடந்த ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தான் இந்த ஆண்டும் பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகளோ, இவ்வாண்டு தங்களைக் கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை என்று கூறி விருப்பம் போல கட்டணம் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு வாய்மூடி ஊமையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு வெளிப்படையாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் சூழல் எதிர்பாராமல் ஏற்பட்டதில்லை. மாறாக தமிழக அரசால் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டதாகும். நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பது தமிழக அரசுக்கு ஏற்கெனவே தெரியும். மாணவர்களின் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால் நீதிபதி சிங்கார வேலு ஓய்வு பெற்றதுமே புதியக் குழுவை அமைத்து கட்டண நிர்ணயத்திருக்கலாம் அல்லது நீதிபதி சிங்காரவேலு குழுவின் பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்கள் நீட்டித்து புதிய கட்டணத்தை நிர்ணயித்து வழங்கும்படி கூறியிருக்கலாம்.

ஆனால், அவ்வாறு தமிழக அரசு செய்யவில்லை. குறைந்தபட்சம் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்கும்படி ஆணை பிறப்பித்து இருக்கலாம். ஆனால், எதையும் செய்யாததற்கு காரணம் தனியார் பள்ளிகள் மீதான பாசம் தான். இப்படிப்பட்டதொரு நிலைமை உருவாக வேண்டும்; அதன்மூலம் தனியார் பள்ளிகள் விருப்பம் போல கட்டணம் வசூலித்து பயனடைய வேண்டும் என்று திட்டமிட்டே இப்படி ஓர் ஏற்பாட்டை அரசு செய்திருப்பதாகத் தோன்றுகிறது.

தனியார் பள்ளிகள் அளவுக்கதிகமாக கட்டணம் வசூலிப்பதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி இலவசமாக நிரப்பப்பட வேண்டிய 25% இடங்களும் முறையாக நிரப்பப்படவில்லை. பள்ளி நிர்வாகங்களிடமிருந்து கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டது என்பதற்காக கட்டணக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

உடனடியாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த ஆண்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக வசூலித்த பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்'' என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x