

ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டபோது லாரி கவிழ்ந்ததில் 3 தொழிலாளர்கள் இறந்தனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உத்தமர்சீலிக்கும், கவுத்தரசநல்லூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அதற்கான உரிமம் முடிந்ததால் சில வாரங்களாக அங்கு மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிலர் இரவு நேரங்களில் அங்கு சென்று லாரிகள் மூலம் மணல் அள்ளி கடத்தி வந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உத்தமர்சீலிக்கும், கவுத்தரசநல்லூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அதற்கான உரிமம் முடிந்ததால் சில வாரங்களாக அங்கு மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிலர் இரவு நேரங்களில் அங்கு சென்று லாரிகள் மூலம் மணல் அள்ளி கடத்தி வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு டிப்பர் லாரியில் அங்கு சென்ற 6 பேர், மணலை அள்ளி லாரியில் நிரப்பியுள்ளனர். நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் லாரியை எடுத்துக்கொண்டு, ஆற்றுக்குள் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண் சாலை வழியாக கரைக்கு வந்துகொண்டு இருந்தனர். அப்போது லாரியின் ஒருபுற சக்கரம், மணலில் புதைந்து லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இதில், லாரி மணல் மீது உட்கார்ந்திருந்த திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள ஓலையூ ரைச் சேர்ந்த சக்திவேல் (எ) லோகநாதன்(25), புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள தெற்கு பண்ணை கத்தக்குடியைச் சேர்ந்த ரங்கன் (எ) ரங்கசாமி(35), கோபால்(30) ஆகியோர் கீழே விழுந்தனர். லாரியில் இருந்த மணல் சரிந்து அவர்களை மூடியது.
லாரியின் முன் பகுதியில் அமர்ந்திருந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சுளிக்கிபட்டியைச் சேர்ந்த பெரியசாமி(30), கத்தக்குடியைச் சேர்ந்த மற்றொரு ரங்கசாமி(40) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. லாரியின் ஓட்டுநர் கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியைச் சேர்ந்த மைக்கேல் தப்பியோடிவிட்டார்.
தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி நடராஜன், சமயபுரம் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் போலீஸாரும், ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணலுக்குள் புதைந்து கிடந்த சக்திவேல், ரங்கசாமி ஆகியோர் மூச்சுத் திணறலால் இறந்திருந்தது தெரியவந்தது. கோபாலுக்கு சுவாசம் இருந்ததால் உடனடியாக அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதேபோல, லாரியின் முன்பகுதியில் சிக்கியிருந்த மற்றொரு ரங்கசாமி, பெரியசாமி ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்க ளில் சிகிச்சை பலனின்றி கோபால் இறந்தார்.
தகவலறிந்த ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சண்முகராஜசேகரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் மைக்கேல், லாரி உரிமையாளர் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர். மணல் திருட்டு மற்றும் விபத்து தொடர்பாக விசாரிக்கின்றனர்.